பின்னணி பாடகர் மனோவின் மகன்களான ரபிக் மற்றும் சாகீரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அதன் பின்னணியை பார்க்கலாம்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் ஏகேஆர் நகரில் வசித்து வருகிறார் பின்னணி பாடகர் மனோ. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடிய பாடகர் மனோவுக்கு சாகீர் மற்றும் ரபிக் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் மனோவின் இரண்டாவது மகனான ரபிக் என்பவர் மதுபோதையில் சிறுவர்கள் இருவரை சரமாரியாக தாக்கிய காட்சிகள் இணையத்தில் பேசுபொருள் ஆனது.

சென்னை மதுரவாயிலை அடுத்த ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரை சேர்ந்த கிருபாகரன் என்பவர் 16 வயது சிறுவன் உடன் வளசரவாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். ஏகேஆர் நகரில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானம் அருகே சென்றபோது, அதே பகுதியில் பாடகர் மனோவின் மகனான ரபிக் உள்பட நான்கு பேர், கிருபாகரனை சுற்றிவளைத்துள்ளனர்.
நாள்தோறும் டஃர்ப் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடும் ரபிக் மற்றும் அவரது நண்பர்கள், வீட்டுக்கு செல்லும்போது மது அருந்துவதும் பின்னர், சாலையில் செல்பவர்களை வேண்டுமென்றே வம்பிழுப்பதும், சில நேரங்களில் அவர்களை தாக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் மது போதையில் இருந்த ரபிக் உருட்டுக்கட்டையால் கிருபாகரனையும் அவருடன் வந்த 16 வயது சிறுவனையும் சரமாரியாக தாக்க, அவரது நண்பர்களும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.
அப்போது ரபிக்கின் அண்ணன் சாகீரும் கிருபாகரனை தாக்கி இருக்கிறார். இதில் கிருபாகரனுக்கு மண்டை உடைந்து ரத்தம் சொட்டிய நிலையில் அவருடன் சென்ற சிறுவனுக்கும் உள்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற போது இரவு ரோந்துப் பணியில் இருந்த போலீசார் தகராறை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசை கண்டவுடன் ரபிக் உள்பட, தகராறில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்ற நிலையில், கிருபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற கிருபாகரன், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று, புகார் அளித்த நிலையில், பாடகர் மனோவின் மகன் ரபிக் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து விசாரணைக்காக மனோ வீட்டிற்கு போலீசார் செல்ல, ரபிக் மற்றும் சாகீர் தலைமறைவானது தெரியவந்தது. பின்னர் மனோ வீட்டில் வேலை பார்த்தவர்களும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுமான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாடகர் மனோவின் மகன் குடிபோதையில் அப்பாவி இளைஞரை அடித்து உதைத்த சம்பவம் இணையத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.

தலைமறைவாக உள்ள மனோவின் இரண்டு மகன்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்காக வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மனோ மகன்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சிடிஆர் மூலம் கண்காணித்து தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது. செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க தனிப்படை ஈசிஆர் விரைந்துள்ளது.