சுங்கைபெட்டானி ,செப்டம்பர் 12-
இந்நாட்டிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு நிலை எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ G. சங்கரன் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கம் ஊழியர்களுக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க முன்வர வேண்டும் என்று டத்தோ ஜி. சங்கரன் வலியுறுத்தினார்.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளில் ஒன்று சம்பளம் உயர்வாகும் . இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கோட்பாடாகும்.

தோட்ட முதலாளிமார்கள் சங்கமான MAPA ( மாப்பா ) தோட்டத் தோழிலாளர்களுக்கான கூட்டு சம்பளம் ஒப்பத்தம் 2021 இல் முடிவடைந்து, 3 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், இந்த சம்பள உயர்வு விவகாரத்தில் மாப்பா, இதுவரையில் எந்தவொரு முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருவதாக டத்தோ ஜி. சங்கரன் குறிப்பிட்டார்.

கோவிட் 19 நோய்த் தொற்றின் போது நாடே வீட்டில் அடைந்து கிடந்த சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் எதுவும் பொருட்படுத்தாமல் அவர்களின் தொழிலை, தியாக உணர்வுடன் மேற்கொண்டனர் என்பதையும் டத்தோ சங்கரன் சுட்டிக்காட்டினார்.
எனவே , நாட்டின் வளர்ச்சிக்கு தோட்டத் தொழிலாளர்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும், தியாயத்தையும் கருத்தில் கொண்டு முதலாளிமார்கள் சங்கமான மாப்பாவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் தோட்டத் தோழிலாளர்களுக்கு
சம்பளம் உயர்வு வழங்குவதற்கு உடனடியாக வழி வகுக்க வேண்டும் என்று டத்தோ சங்கரன் கேட்டுக்கொண்டார்.

நேற்று புதன்கிழமை ,கெடா, சுங்கைபெட்டானி, ப்யூரெஸ்ட் தங்கும் விடுதியில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கெடா , பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகிய கிளைகளின் ஏற்பாட்டில் மனித வள அமைச்சின் தொழிற்சங்க விவகார இலாகாவின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கான கருத்தரங்குப் பட்டறையை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தப்பின்னர் செய்தியாளர்களிம் பேசுகையில் டத்தோ சங்கரன் இதனை தெரிவித்தார்.
படவிளக்கம்
டத்தோ ஜி. சங்கரன்,
பொதுச் செயலாளர் NUPW