மலேசியாவின் உள்நாட்டு உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்கிடும் விவசாயத்துறை, வங்காளதேசிகளின் ஆதிக்கமாக மாறாலாம் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் Muhamad Sabu அச்சம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விவசாயத்துறை தற்போது அந்நியத் தொழிலாளர்களின் ஏகபோகமாக இருந்து வருகிறது என்று இன்று வெள்ளிக்கிழமை 2024 ஆம் ஆண்டுக்கான MADANI AGRO தொழில் முனைவர்கள் மாநாட்டில் உரையாற்றுகையில் அமைச்சர் முகமட் சாபு தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் வர்த்தகத்துறையில் ALIBABA பிரச்னை மட்டும் மேலோங்கி நிற்கவில்லை. ALI BANGLA என்ற நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயத்துறை முன்பு இருந்த நிலையைப் போல் ஆகிவிடக்கூடாது. கடந்த 60,70,80, 90 ஆம் ஆண்டுகளில் அலி என்று சொல்லக்கூடிய பூமிபுத்ராக்கள் மத்தியில்தான் லைசென்ஸ் இருந்தது. வர்த்தக வாய்ப்புகளை அவர்கள்தான் பெற்றனர். வர்த்தகத்தில் நிர்வாகிகளைப் போல் பவனி வந்தனர்.. ஆனால், தொழிலை முழுக்க முழுக்க ஏற்று வழிநடத்தியவர்கள் Baba என்று சொல்லக்கூடிய சீனர்கள்தான்.
அலியின் போக்கில் 2000 ஆம் ஆண்டுகளிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை. அதே அலிக்குதான் வர்த்தக வாய்ப்ப கிடைத்தது. லைசென்ஸ் கிடைத்தது. ஒரு நிர்வாகியைப் போல அலி தொடர்ந்து வலம் வருகிறார்.. ஆனால், அவர்களின் தொழிலை தற்போது ஏற்று நடத்துகின்றவர்கள் வங்காளதேசிகள் என்று அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார்.
Ali Baba தற்போது Ali Bangla- வாக மாறிவிட்டனர் என்பதே நடப்பு உண்மையாகும். விவசாயத்துறை அவர்களின் கைகளுக்கு மாறிக்கொண்டு இருக்கிறது என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.