மூவார் .செப்டம்பர் 12-
வயதான பெற்றோர்கள் மற்றும் உறவுக்காரப்
பெண்ணை கொலை செய்ததோடு வீட்டிற்கும் தீயிட்டதாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள வேலையில்லாத ஆடவருக்கு மற்றொரு உறவுக்காரப் பெண்ணைத் தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக ஒன்பது ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அஸ்மான் முஹமட் நார் என்ற 48 வயதுடைய அந்த ஆடவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நாரிமன் பதுருதீன் இந்த தண்டனையை விதித்தார்.
மேலும், இக்குற்றத்திற்கு 5,000 வெள்ளி அபராதம் விதித்த நீதிபதி, அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி விடியற்காலை 1.00 மணிக்கும் 3.00
மணிக்கும் இடையே மூவார், கம்போங் பாயா ரெடான், பாகோ – வில் உள்ள ஒரு வீட்டில் 14 வயதுப் பெண்ணைத் தாக்கி
காயப்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.