ஈப்போ , செப்டம்பர் 13-
பேரா, தஞ்சோங் ரம்புத்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் முன் வளாகத்தை , காரினால் மோதிய அதன் ஓட்டுநர், மதுபோதையில் இருந்தார் என்று கூறப்படுவதை போலீசார் மறுத்தனர்.
நேற்று வியாழக்கிழமை காலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள காரோட்டி மதுபோதையில் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
41 வயதுடைய அந்த காரோட்டி, ஒரு நீரிழிவு நோயாளி ஆவார். தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள ஒரு கிளிக்கிலிருந்து சாங்கட் கிண்டிங்- கை நோக்கி அந்த நபர் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று சுயநினைவு இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சமிக்ஞை விளக்கை கடந்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, கோயிலை நோக்கி பாய்ந்தது.
இதில் கோயிலின் தூணில் மோதி, அந்த கார் நின்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ அசிசி குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 8.36 மணியளவில் போலீசார் புகார் ஒன்றை பெற்றனர். இதில் யாரும் காயம் அடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபரின் பின்னணியை ஆராய்ந்த போது, அவர் நீரிழிவு நோயினால் அவதியுற்று வந்தது தெரியவந்துள்ளதாக டத்தோ அசிசி விளக்கினார்.
இச்சம்பவம் குறித்து 1959 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.