நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை செய்து வருகிறது. பல கட்ட விமர்சனங்களைத் தாண்டி, திரையரங்கில் இருக்கும் ரெஸ்பான்ஸ், தொடர்ச்சியாக விஜய்யின் படங்கள் செய்யும் சாதனைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதல் படத்திலேயே ஹிட் ஆன Combination
வெங்கட் பிரபு – விஜய் இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைத்து தயாரான படம்தான் ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஒரு துறையில் சிறந்து விளங்கும் ஆளுமையை GOAT என்று அழைப்பதுதான் வழக்கம். அப்படி இருக்க, வெங்கட் பிரபு கதை சொல்லி பட தலைப்பு சொன்ன போது, GOAT ஆ, அப்டினா என்னயா?’ என்று கேட்டுள்ளார் விஜய். அதற்கு, ‘அண்ணா, GOAT-னா தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். OG-னா ஒரிஜினல் வில்லன் (Original Gangster). இப்போலாம் இதுதான்ணா Trending Terms’ என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

ஆக, பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என்று ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு நடிகரை தேர்வு செய்யாமல், தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமே தேர்வு செய்தது படக்குழு. வழக்கமான தனது நண்பர்கள் உட்பட பிரசாந்த், 90ஸ் களின் ஆதர்ச நாயகன் மோகன், லைலா, வசீகரா Pair சினேகா என்று பெரிய நடகர் பட்டாளமே படத்தில் இணைந்தது. கூடுதலாக துப்பாக்கியில் Boss ஆக வந்த ஜெயராம், டோலிவுட் இளம் நாயகி மீனாட்சி சௌத்ரி ஆகியோரும் இணைந்தனர்.
ஹைப்பை ஏற்றிய லோகேஷ்.. அமைதியாகச் சொன்ன விஜய்
சமீபகாலமாக விஜய் படங்கள் என்றாலே பெரிய ஹைப் ஏற்றப்படும். அதில் கிங் மேக்கர் என்றால் லோகேஷைச் சொல்லலாம். ஆம், ‘இது 100 % என்னோட படம்ங்க.. எப்புடி இருக்கும்னு பாருங்க. அண்ணன் விஜய் பின்னி எடுத்திருக்கார்’ என்று கூற ‘லியோவ பார்த்தே ஆகணும்டா. இல்லனா பெரிய பாவம் பண்ண மாதிரி இருக்கு’ என்று நாமே யோசிக்கும் அளவுக்கு மைண்ட் வாஷ் செய்தார் லோகேஷ். உண்மையில் தனி ஆளாகத்தான் லியோவை தாங்கிப் பிடித்திருந்தார் விஜய்.

சரி இந்த பக்கம் கோட் படத்திற்கு வருவோம். லியோ திரைப்படம் என்னதான் 620 கோடி ரூபாயை வசூல் செய்துவிட்டாலும், விமர்சன பக்கமாக கலைவயான விமர்சனங்களே இருந்தன. இதனால், பெரிய படங்களுக்கு ஹைப் வேண்டாம் என்று விஜய்யும், கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் திட்டமிட்டு, கடைசிவரை அதனை கடைபிடித்து வந்தனர். படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால் ஜிஎஸ்டி உட்பட 400 கோடி. இதற்கு நடிகர் விஜய்யின் சம்பளமே 200 கோடியாக இருக்கிறது. அந்த அளவுக்கு அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. விஜய் படம் என்றாலே Profit என்ற நம்பகத்தன்மை இருப்பதாகவும் தெரிவித்தார் அர்ச்சனா.
சைலண்ட்டாக வந்து பூந்து விளையாடும் ’கோட்’
கடைசி நான்கு நாட்கள் வரை, நமது அலுவலக நண்பரே ‘யோவ் என்னயா 5ம் தேதி விஜய் படம் வருதாம். ஒரு பேச்சையுமே காணோம். என்னதான்யா ஆச்சு நம்ம ஊருக்கு’ என்று கேட்கும் அளவுக்கு இருந்தது ப்ரொமோஷன். அதற்கு பிறகுதான் ஆட்டமே. ஆம், ‘Producer Akka’ என்று நெட்டிசன்கள் பாசமாக அழைக்கும் அளவுக்கு அப்டேட்டுகளையும், சுவாரஸ்ய தகவல்களையும் அள்ளி கொட்டினார் அர்ச்சனா கல்பாத்தி. வெங்கட் பிரபுவும் கூட. பிரேம்ஜி, வைபவ் பேசியதுதான் ஹைலேட்டே.. ‘நீங்க பார்த்தீங்கனா, ஒன்றரை நிமிஷத்துல இந்த சீன் வரும். இங்க எல்லாம் ஹைப் மொமண்ட் இருக்கும்’ என்று போட்டு உடைத்தனர். ‘யோவ் எதையாவது சொல்லி அவன நிறுத்துங்களேன்ப்பா’ என்று நெட்டிசன்களே கதறும் அளவுக்கு கடைசி நான்கு நாட்களில் ஹைப் தீயாக ஏற்றப்பட்டது.

ஒரு வழியாக படம் வெளியாகும் அந்த ஒரு நாளில் மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளிக்க, படமும் காலை 9 மணிக்கு வெளியானது. தமிழ்நாட்டைத் தாண்டி உலக நாடுகள், அண்டை மாநிலங்களில் படம் 4 மணிக்கே வெளியானது. தமிழ்நாட்டில் முதல் ஷோ முடிவதற்குள் படம் ‘ஆஹா ஓஹோ’ என்று எக்ஸ் தளத்தில் பதிவுகள் பறந்தன. தமிழ்நாட்டில் 9 மணி ஷோ துவங்கிய அடுத்த ஒரு சில நொடிகளில் ‘ச்ச.. என்னயா படம் இது. இதுக்கா இவ்ளோ சீன்’ என்று ஓடாத பழைய பட ரிவ்யூ வீடியோக்களை பலரும் பரப்பினர். சினிமாவில் இருந்து அரசியலில் நுழையும் விஜய்க்கு இருக்கும் அரசியல் எதிரிகள்தான் இந்த வேலையை செய்திருப்பார்கள் என்றும் கூறியது விஜய்யின் ரசிகர் தரப்பு.
தீப்பிடிக்கும் திரைகள்.. தீராத GOAT மோகம்!
இவை அனைத்தையும்தாண்டி, முதல்நாளில் 100 சதவீதமும் இருக்கைகள் நிரம்பின. அடுத்த நாள் அதாவது 6ம் தேதி 95 சதவீதமும் சனி, ஞாயிறில் 100 சதவீதமும் தியேட்டரில் இருக்கைகள் நிரம்பின. ஒரு படத்தின் வெற்றியே, வார வேலை நாட்களில் அது எந்த அளவுக்கு தியேட்டரில் Perform செய்கிறது என்பதைப் பொருத்துதான். அப்படிப்பார்த்தால், கோட் படத்திற்கு முதல் திங்களில் கிட்டத்தட்ட 90 சதவீத occupancy இருந்துள்ளது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமையில் 70 – 80 சதவீதமும், இன்று 50 – 60 சதவீதமும் occupancy இருக்கிறது. ஆக கோட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், தியேட்டரில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் விவரம் என்று பார்த்தால், முதல் நாளில் உலகம் முழுவதும் 126 கோடியே 32 லட்சத்தை வசூல் செய்தது. தொடர்ந்து நான்கு நாட்களில் 288 கோடி ரூபாயை வசூல் செய்ததாக போஸ்டர் வெளியிட்டார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. தெலுங்கு மாநிலங்களில் படம் பெரிதாக எடுபடவில்லை என்றாலும் வட மாநிலங்களில் ஓரளவுக்கு சம்பவம் செய்துள்ளது. ஆம், வட மாநிலங்களில் இதுவரை 16.55 கோடி ரூபாயை வசூலித்துள்ளது தி கோட்.