செப்டம்பர் 14-
“தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அண்ணனின் GOAT திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த எனது தந்தை கேப்டனை காட்சிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” விஜய பிரபாகரன் தேனியில் பேட்டி.
விஜய், வெங்கட்பிரபு இருவரும் குடும்பத்தில் ஒருவர்
நடிகர் விஜய்-ன் GOAT திரைப்படத்தை தேனி வெற்றி திரையரங்கில் நடிகர் சரத்குமார், இயக்குநர் பொன்ராம் மற்றும் விஜயகாந்த்-ன் மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முகம் பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு பார்த்தனர்.
படத்தின் இடைவெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய பிரபாகரன், “மறைந்த எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பம் மூலம், விஜய்யின் The GOAT திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெங்கட்பிரபு எனது தந்தையின் காட்சியை நன்றாக இயக்கியிருக்கிறார். விஜய் அண்ணனின் நடிப்பு, யுவனின் இசை நன்றாக இருக்கிறது. விஜய் அண்ணன், வெங்கட் பிரபு அண்ணன் இருவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர்களே. செந்தூரப்பாண்டி, நெறஞ்ச மனசு என அந்த உறவு தொடர்கிறது. அதனடிப்படையில்தான் The GOAT திரைப்படத்தை விஜயகாந்த்-திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எடுத்திருப்பதாக தெரிவித்திருந்தனர்” என தெரிவித்திருந்தார்.