கோலாலம்பூர், செப்டம்பர் 17-
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசாங்க மானியம் குறித்து மடாணி அரசாங்கம் பரிந்துரை செய்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு ஒப்பந்தம் எதிர்க்கட்சியினரால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இதன் மீதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து விட்டது என அர்த்தமல்ல என்று மடாணி அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாமி ஃபட்ஸில் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து எதிர்க்கட்சியுடன் ஒத்துழைக்கவோ பேச்சுவார்த்தை நடத்தவோ மடாணி அரசாங்கம் தயாராக இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சருமான அவர் கூறினார்.
பிரதமர் டத்தொஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முதன்முதலாகப் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தமது கதவு எப்போதும் திறந்திருக்கும் எனக் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டு ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சியினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதற்கு அரசாங்கம் தயார் எனவும் அவர் கூறினார்.
இப்பரிந்துரையை எதிர்க்கட்சியினர் நிராகரித்தாலும்கூட அதன் அதிகாரத்துவக் கடித்திற்காகத் தாம் காத்திருப்பதாகத் துணைப்பிரதமர்
டத்தோஶ்ரீ ஃபடிலா யூசோப் கூறியுள்ளதையும் அவர் வரவேற்றார்.