17 செப்டம்பர்
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.
2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது.
2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அணிகளுக்கும் இந்தத் தொடரின் வெற்றி அவசியம் என்பதால் தீவிரமாக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.
பாகிஸ்தான் பயணம் சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி அந்நாட்டு மண்ணில் வைத்தே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஒருமுறை கூட வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது.
இருப்பினும் சென்னை மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்த இந்திய அணியில் இருப்பது போன்று வலுவான சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியிலும் உள்ளனர்.
ஆதலால் சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற்பந்துவீச்சில் எந்த அளவு நெருக்கடி அளிக்குமோ அதே அளவு அழுத்தத்தை வங்கதேசமும் அளிக்கும்.
கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்திய அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் அணி விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு போட்டியிலும் கூட அது வெற்றி பெறவில்லை, இந்திய அணி 11 வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செய்கிறது.
கவனிக்கப்படும் வீரர்கள்

இந்திய அணியில் இரு வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்கிறார்கள். விராட் கோலி, ஏறக்குறைய 9 மாதங்களுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அடுத்ததாக ரிஷப் பந்த், கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார். தற்போது அவர் 2 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருவரின் பேட்டிங் திறமையும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
ஏனென்றால், கோலி இடத்துக்கு ஷூப்மன் கில், சர்ஃபிராஸ் கான், கே எல் ராகுலும்; ரிஷப் பந்த் இடத்துக்கு துருவ் ஜூரெல், கே எல் ராகுலும் போட்டியிடுகிறார்கள். ஆதலால் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இடதுகை பந்துவீச்சாளர் யாஷ் தயால் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தவிர இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்ன் மோர்கல் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
“இந்திய பந்துவீச்சாளர்கள் ஏற்கெனவே திறமையாகப் பந்துவீசுகிறார்கள். அவர்களின் திறமையை மெருகேற்றவே முடிந்தவரை உழைப்பேன் பெரிதாக மாற்றம் செய்யமாட்டேன்”, என மோர்கல் தெரிவித்துள்ளார்.