17 செப்டெம்பர் 2024
தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜூன் 18 முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை மீன்பிடிக்க சென்ற மீனவர்களில்,160-க்கு அதிகமான மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையை பிபிசி தமிழிடம் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கை மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக திட்டமிட்டு கைது நடவடிக்கையை இலங்கை அரசு அதிகரித்துள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் இதனை மறுத்துள்ளார்.

தமிழக மீனவர் உயிரிழப்பு
இலங்கையில் வரும் 21-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாச, அனுரா குமார திசநாயக்க ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் வட மாகாண மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக இலங்கை கடற்படை சமீப காலமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நூற்றுக்கணக்கான மீனவர்களை இலங்கை அரசு அடுத்தடுத்து கைது செய்துள்ளதாகவும், மீனவர்களை சிறை பிடிக்கும் போது கடற்படை ரோந்து படகு மோதி தமிழக மீன்பிடி படகுகள் மூழ்கடிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீன்பிடி படகின் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியது. 4 மீனவர்கள் சென்ற அந்த படகு மூழ்கியது.
அவர்களில் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இருவர் உயிருடன் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்கள் பின்னர் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எஞ்சிய இரண்டு மீனவர்களில் ஒருவரான மலைச்சாமி உயிரிழந்த நிலையில் சடலமாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டார். மற்றொரு மீனவர் ராமச்சந்திரன் தற்போது வரை கிடைக்கவில்லை.
பின்னர் உயிரிழந்த மீனவர் மலைச்சாமி உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட முத்து முனியாண்டி, மூக்கையா இருவருரையும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
