பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 18-
18 லட்சம் வெள்ளி மதிப்புள்ள இந்திய ஆமைகள் மற்றும் முதலைக்குட்டிகளை கடத்தி வந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரை கைது செய்தது மூலம் 30 முதலைக்குட்டிகள் மற்றும் 14 இந்திய ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் மூலமாக விமானத்தில் அந்த நபர், இந்த அரிய ஊர்வனங்களை கடத்தி வந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கொடிய விலங்கினம் தொடர்பில் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த நபரை போலீசார் கைது செய்ததாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப்பிரிவின் இடைக்கால இயக்குநர் முகமது யூசப் மாமத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், தெற்காசிய நாட்டிலிருந்து முதலைக்குட்டிகளையும், இந்திய ஆமைகளையும் கடத்தி வந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
முதலைக்குட்டி ஒன்றின் விலை 60 ஆயிரம் வெள்ளி என்றும் இந்திய ஆமையின் விலை ஆயிரத்து 350 வெள்ளி என்றும் நம்பப்படுகிறது.