19 செப்டெம்பர் 2024
அமெரிக்க நிறுவனமான டப்பர்வேர் விற்பனை சரிவால் திவால் மனு சமர்ப்பித்துள்ளது.
உணவு சேமிப்பு பாத்திரங்கள், உணவுப் பொருள் வைக்கும் கொள்கலன்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வரும் டப்பர்வேர், தனது நிறுவனத்தின் விற்பனைக்கு நீதிமன்ற அனுமதியைக் கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டே இதை செய்திருப்பதாக கூறியுள்ளது.
78 வருடங்களாக செயல்பட்டு வரும் டப்பர்வேர் நிறுவனம், உணவுப் பொருள் வைக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் தயாரிப்புக்கு பேர்போனது. உணவு வைக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிப்பிடும்போது பலர் `டப்பர்வேர்’ என்று சொல்வது வழக்கம்.
சமீபத்திய ஆண்டுகளில் அதன் தயாரிப்புகள் மேம்படுத்தப்பட்ட போதும், இளம் தலைமுறையினரை கவர முயற்சித்த போதிலும் அது கைக்கொடுக்கவில்லை. போட்டி நிறுவனங்களிடமிருந்து தனித்து நிற்கத் தவறிவிட்டது.
கடந்த ஆண்டு, புதிய நிதியை விரைவாக திரட்ட முடியாவிட்டால், நிறுவனம் வீழ்ச்சியடைந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டது.
திவால் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் இந்த வாரம் 50% வரை சரிந்துள்ளன.
விற்பனையில் சிறிதளவு உயர்வு இருந்த போதிலும், கொரோனா காலகட்டத்தின் போது மக்கள் வீட்டில் சமைத்ததால் டப்பர்வேர் பாத்திரங்களின் தேவை தொடர்ந்து சரிவைக் கண்டது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிக ஊதியம் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
“கடந்த பல ஆண்டுகளாக, சவால் நிறைந்த பொருளாதாரச் சூழலால் நிறுவனத்தின் நிதி நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று டப்பர்வேர் தலைமை நிர்வாகி லாரி ஆன் கோல்ட்மேன் முதலீட்டாளர்களுக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
டப்பர்வேர் 1946 இல் ஏர்ல் டப்பர் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் `காற்று புகாத கொள்கலன்களுக்கு’ காப்புரிமை பெற்றார்.


அந்த சமயத்தில் டப்பர்வேர் ஒரு பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. ஏனெனில் இது புதிய வகை பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்தி உணவை நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்க முடியும் என்பது மக்களை ஆச்சரியப்படுத்தியது. குளிர்சாதனப் பெட்டிகள் விலை உயர்ந்ததாக இருந்த காலகட்டத்தில் இது பல குடும்பங்களுக்கு விலைமதிப்பற்றதாக இருந்தது.
எனினும், அதன் வெற்றி உடனடியாக நிகழ்ந்துவிடவில்லை.
விற்பனையாளர் பிரவுனி வைஸ் என்பவர்தான் டப்பர்வேர் பிராண்டை குடும்பங்கள் விரும்பும் பெயராக மாற்றி சாதித்தார்.


பெரும்பாலும் பெண்களாக இருந்த விற்பனையாளர்கள், தங்கள் வீடுகளில் உள்ள மற்ற பெண்களுக்கு டப்பர்வேர் விற்கும் அணுகுமுறையை கற்பிக்கும் ஒரு முறையை அவர் உருவாக்கினார். இதனை “டப்பர்வேர் பார்ட்டிகள்” என்று அழைத்தனர்.
நிறுவனத்தின் கூற்றுப்படி, டப்பர்வேர் இப்போது உலகம் முழுவதும் 70 நாடுகளில் விற்கப்படுகிறது.