புத்ராஜெயா,செப்டம்பர் 19-
அந்நிய நாட்டவர்களை சோதனையின்றி நாட்டிற்குள் விடுவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் செட்டிங் முகப்பிடம் அமைத்து மோசடி செய்த மிகப்பெரிய ஊழல் அம்பலமானதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்டு வரும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயார் என்று மலேசிய குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழையும் அந்நிய நாட்டவர்களுக்கு எந்தவொரு சோதனையும் நடத்தாமல் நாட்டிற்குள் அனுமதிக்கும் இந்த சதிநாசவேலையில் 40 வயது மதிக்கத்தக்க உயர் அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக 49 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதை SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி அம்பலப்படுத்தியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய மிரட்டலை ஏற்படுத்தும் இந்த ஊழலில் SPRM மேற்கொள்ளும் அனைத்து வகையான விசாரணைக்கும் குடிநுழைவுத்துறை முழு வீச்சில் ஒத்துழைப்பு நல்கும் என்று மலேசிய குடிநுழைவுத்துறை புதிய தலைமை இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ளடத்தோ ஜகாரியாக் ஷபான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எல்லை நுழைவாயில்களை பாதுகாப்பதற்கு முக்கியப் பணியை ஏற்றுள்ள குடிநுழைவுத்துறையில் இது போன்ற மோசடிகள் நிகழ்ந்து இருப்பதை அறவே சகித்துக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.