சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக திரும்ப அணையா விளக்கு ஏற்றி வழிபாடு- அவரது பூர்வீக கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?

20 செப்டம்பர்-

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலன் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் ஜூன் 5-ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்கள். ஆனால் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

சுனிதாவின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களும் அவரை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் குஜராத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ஜூலாசனிலும் எதிரொலித்துள்ளது.

அங்கு உள்ள சுனிதாவின் உறவினர்களும், அபிமானிகளும் செப்டம்பர் 19-ஆம் தேதி அவரது 59வது பிறந்தநாளுக்காக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பவேண்டும் என்பதற்காக வழிபாடு செய்து வருகின்றனர்.

“அவருக்கு அங்கு என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று சுனிதா வில்லியம்ஸின் உறவினர் நவீன் பாண்டியா கூறினார்.

“அவர் நலமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் மறுபுறம் அவர் பத்திரமாக திரும்பி வர முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர். உண்மையில் என்ன நடக்கிறது, எப்போது, எப்படி அவர் திரும்பி வருவார் என்பது பற்றிய உண்மையான தகவல்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை,” என்று அவர் கூறினார்.

குஜராத் தலைநகர் காந்திநகருக்கு வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜூலாசன் கிராமத்தில் பல்வேறு சாதிகள் மற்றும் சமூகத்தை சேர்ந்த சுமார் 7,000 மக்கள் வசிக்கின்றனர்.

2007 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் ஜூலாசனுக்கு வந்துள்ளார். சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா இந்த கிராமத்தில்தான் பிறந்தார். 1957-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து முடித்த பிறகு, அவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

அங்கு அவர் உர்சுலின் போனி என்பவரை மணந்தார், அவர்களுக்கு 1965-ஆம் ஆண்டு சுனிதா பிறந்தார். தற்போது, சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நிலையில், அவரது பாதுகாப்பிற்காக இந்த கிராமமே வழிபாடு நடத்தி வருகிறது.

WATCH OUR LATEST NEWS