பும்ரா புயலில் சுருண்ட வங்கதேசம்- சேப்பாக்கத்தில் நடந்த திடீர் மாற்றம் என்ன?

பும்ராவின் ‘மாஸ்டர் கிளாஸ்’ பந்துவீச்சு, அறிமுக வீரர் ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களில் சுருண்டது.

ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 308 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்து வருகிறது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது. சுப்மான் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

கோலி, ரோஹித் சொதப்பல்

2வது இன்னிங்ஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் 5 ரன்னில் தஸ்கின் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சேப்பாக்கமா இது!

சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 4 விக்கெட், ஆகாஷ், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91.2 ஓவர்களில் 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

வங்கதேசம் அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றது.

227 ரன்கள் முன்னிலை பெற்றாலும் வங்கதேசத்துக்கு ஃபாலோ ஆன் வழங்காமல் தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்ஸிலும் பேட் செய்தது.

3வது நாளில் இருந்து மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல்நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்திருந்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால் நீண்டநேரம் இந்திய பேட்டர்கள் நிலைக்கவில்லை. 10.2 ஓவர்கள் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

அனைத்துமே கேட்ச்தான்

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 10 பேருமே கேட்ச் பிடிக்கப்பட்டுதான் விக்கெட்டுகளை இழந்தனர். உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்கள் அனைவரும் ஒரு இன்னிங்ஸில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழப்பது இது 4வது முறையாகும்.

சமீபத்தில் 2021-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தனர்.

சேப்பாக்கில் 3வது 5 விக்கெட்

வங்கதேசத் தரப்பில் ஹசன் மெஹமது 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியப் பயணத்துக்கு வந்த ஒரு அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுதான் முதல்முறையாகும். 2012 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரின் விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தியிருந்தனர்.

அது மட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இதுவரை 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் வீழ்த்தியிருந்தனர். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஜேம்ஸ் பட்டின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இப்போது வங்கதேச வீரர் ஹசன் மெஹ்மது வீழ்த்தியுள்ளார்.

மிரட்டிய இந்திய பந்துவீச்சு

வங்கதேசம்

இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் மூவரும் சேர்ந்து தொடக்கத்திலிருந்தே வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறவிட்டனர்.

ஷத்மான் இஸ்லாம், ஜாகீர் ஹசன் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்தது.

அடுத்து கேப்டன் ஷான்டோ களமிறங்கி, ஹசனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அறிமுக வீரரான ஆகாஷ் தீப் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் இன்ஸ்விங், லெக் கட்டர் முறை பந்துவீச்சு வங்கதேச பேட்டர்களுக்கு புதிதாக இருந்ததால், ஆகாஷ் வீசிய பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டனர்.

விக்கெட் சரிவு

உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேச அணி அடுத்தடுத்து ஷான்டோ(20) சிராஜ் பந்துவீச்சில், முஷ்பிகுர் ரஹ்மான்(8) பும்ரா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஆஃப்சைடில் பவுன்ஸ் ஆன பந்தை தடுத்து ஆட முஷ்பிகுர் ரஹ்மான் முயன்றபோது, 2வது ஸ்லிப்பில் இருந்த ராகுல் எளிதாக பந்தை கேட்ச் பிடித்தார்.

6வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், ஷகிப் அல்ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 50 ரன்கள் சேர்த்தனர். லிட்டன் தாஸ்(22) விக்கெட்டையும், ஷகிப் அல்ஹசன்(32) விக்கெட்டையும் ஜடேஜா எடுத்து ஆட்டத்தில் ஸ்வாரஸ்யம் சேர்த்தார்.

ஹசன் மெஹ்மது(9), தஸ்கின் அகமது(11) விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தவே, 5 விக்கெட்டுகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டைான ராணாவை க்ளீன் போல்டாக்கி சிராஜ் வீழ்த்தியதால் பும்ராவுக்கு 5 விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

WATCH OUR LATEST NEWS