திருப்பதி லட்டு: விலங்குக் கொழுப்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டின் முழு பின்னணி- முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கூறுவது என்ன?

செப்டம்பர் 21-

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தற்போது சர்ச்சையாகியுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது வழங்கப்பட்ட திருப்பதி லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அமராவதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தகவலை வெளியிட்டார் சந்திரபாபு. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வணிகர் சங்கத் தலைவர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

சந்திரபாபு கூறியது என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய சந்திரபாபு முந்தைய ஆந்திர அரசை விமர்சனம் செய்தார்.

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் லட்டுவை தயாரிக்கும்போது முறையான தர நிலைகளை முந்தைய அரசு பின்பற்றவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.”தரக் குறைவான பொருட்களைக் கொண்டு லட்டுகள் தயாரிக்கப்பட்டது. இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். அன்னதானத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களும்கூட தரமற்றதாக இருந்தது.

கடவுளுக்கு வாங்கும் பிரசாதத்தில் இத்தகைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. சில நேரங்களில் இது மிகவும் வருத்தமளிக்கிறது. சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் லட்டுவின் தரத்தை உயர்த்துவோம். வெங்கடேஷ்வரரின் புனிதத்தைக் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது,” என்று கூறினார் சந்திரபாபு.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கூறுவது என்ன?


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

“ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் 100 நாள் ஆட்சியின் தோல்வியில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே லட்டில் நெய் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்கிறார்” என்று முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

“தனது அரசியல் நலனுக்காக, அவர் திருப்பதி கோவிலில் ஊழல் செய்து வருகிறார். இது குறித்து பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன்”, என்று அவர் கூறினார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராகப் பணியாற்றிய ஒய்.வி.சுப்பாரெட்டி, சந்திரபாபுவின் இந்தக் கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும், திருமலையின் புனிதத்தையும் சேதப்படுத்தும் வகையில் பேசி சந்திரபாபு மிகப்பெரிய பாவத்தைச் செய்துவிட்டார் என்று சுப்பாரெட்டி கூறியுள்ளார். சந்திரபாபுவின் கருத்து மிகவும் மோசமானது என்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் – ஒய்.எஸ். ஷர்மிளா

திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுகள்

அரசாங்கம் உடனடியாக உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து இதை விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறினார். முதல்வராக இருக்கும் சந்திரபாபு, லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது எனக் கூறியிருப்பது வருத்தமடைய வைக்கிறது, மேலும் திருப்பதியின் மாண்பு மற்றும் புனிதத்திற்கு கலங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

தேவஸ்தானம் கூறுவதென்ன?

இந்த சர்ச்சை குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் பதிலளித்துள்ளார்.

கடந்த ஜூன் 16 அன்று அவர் பொறுப்பேற்றதில் இருந்து நெய்யின் தரம் குறித்து தகவல்கள் சேகரித்து வந்ததாதவும், முதல்வர் சந்திரபாபு உத்தரவுப்படிதான் நெய்யின் தரம் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“லட்டுகளின் தரம் குறித்து, பக்தர்களிடம் இருந்து சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை அடுத்து, சமையலறை ஊழியர்களுடன் பொருட்களின் தரம், குறிப்பாக பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து பேசியிருக்கிறேன். இதற்கு தீர்வு காண நெய்யின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது”, என்று கூறினார்.

“கோயில் நிர்வாகத்தில் சோதனை வசதிகள் இல்லாததை நெய் நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஆய்வக முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது”, என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

தேவஸ்தான சங்கத் தலைவர்கள் கூறுவது என்ன?

ஆந்திரபிரதேசம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷர்மிளா
படக்குறிப்பு,ஆந்திர பிரதேசம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷர்மிளா

திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் கந்தரபு முரளி, முதல்வரின் கருத்தை விமர்சனம் செய்தார்.

லட்டுவில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவது திருமலை தேவஸ்தான ஊழியர்களை அவமதிக்கும் செயல் என்று கூறினார்.

தேவஸ்தானத்தில் இருக்கும் ஆய்வகத்தில் அனைத்து விதமான உணவுப் பொருட்களும் முறையாக சோதிக்கப்பட்டே எந்தவிதமான பிரசாதமும் தயாரிக்கப்படுகிறது. பரிசோதனைகள் முடிவுற்ற பிறகே பயன்பாட்டிற்கும் வைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் குழுவால் சோதிக்கப்படும் உணவுப் பொருட்கள் முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே பிரசாதத்திற்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் பாஜக

திருப்பதி கோவிலில் முறையான சோதனைகளுக்குப் பிறகே லட்டுகள் தயாரிக்கப்படுவதாக தேவஸ்தானம் கூறியுள்ளது

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான தலைவருமான லக்‌ஷமணன் லட்டுவில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.

“மொத்த இந்து சமூகமும் இந்தச் செயலை கண்டிக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில் ஆட்சி அமைத்திருக்கும் சந்திரபாபு, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

ஆய்வக முடிவுகள் கூறுவது என்ன?

ஆய்வகம் வெளியிட்ட சோதனை முடிவுகள்

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி, குஜராத்தில் அமைந்திருக்கும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் உணவு மாதிரிகளை அனுப்பியதாகத் தெரிவித்தார்.

ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட உணவுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எஸ் என்ற மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் கொழுப்பு இருந்தால் அது வெளிப்புற கொழுப்பு என்று அறிவிக்கப்படும். எஸ்-இன் மதிப்பானது 95.68 முதல் 104.32-க்குள் இருக்க வேண்டும்.

சோயா, சூரியகாந்தி, ஆலிவ், மீன் எண்ணெய் அல்லது பாமாயில் போன்றவை வெளிப்புற கொழுப்பு என்று கருதப்படுகிறது.

இருப்பினும், இந்த ஆய்வக முடிவு தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தால்தான் வழங்கப்பட்டது என்பதை பிபிசியால் உறுதி செய்ய இயலவில்லை.

புனிதமான லட்டுகளை உருவாக்குவோம் – சந்திரபாபு

செப்டம்பர் 19ஆம் தேதியன்று, இந்த சர்ச்சை குறித்து மீண்டும் பேசிய சந்திரபாபு, ”திருமலை திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகள் கோடிக்கணக்கான மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. தற்போது அது கலப்படமாக்கப்பட்டுள்ளது.

அதை அவர்கள் சரி செய்து வருகின்றனர். தரமான மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தரமான லட்டுகளை வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS