மஸ்ஜிட் இந்தியா வழக்க நிலைக்கு திரும்ப 6 மாதங்களாகும்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 21-

கோலாலம்பூர் மாநகரின் முக்கிய வர்த்தகத் தலமான ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமி, ஆள்விழுங்கும் பாதாள சாக்கடையில் விழுந்து காணாமல் போன சம்பவத்திற்கு பிறகு அங்கு நடைபெற்று வரும் சீரமைக்கும் பணிகளினால் அந்த முக்கிய வர்த்தகப் பகுதி வழக்க நிலைக்கு திரும்புவதற்கு குறைந்த பட்சம் 6 மாத காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஸ்ஜிட் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நில அமிழ்வுப்பகுதிகளை சீரமைப்புக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

நடைப்பாதைகளில் காணப்படும் குழிகளை சீரமைப்பதற்கு குறைந்த பட்சம் 3 மாதம் முதல் 6 மாத காலம் ஆகலாம் என்று பிரதமர் துறையின் கூட்டரசுப்பிரதேசத்திற்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சீரமைப்புப்பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் பூர்த்தியடைய வேண்டும் என்று அப்பகுதி வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்துரைக்கையில் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா மேற்கண்டவாறு கூறினார்.

மஸ்ஜிட் இந்தியாவிற்கு வருகின்ற பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மக்கள் சற்று பொறுமைக்காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS