கோலாலம்பூர், செப்டம்பர் 25-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய செட்டிங் மோசடியைத் தொடர்ந்து மலேசிய குடிநுழைவுத்துறையில் மாபெரும் சீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று அதன் புதிய தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் அறிவித்துள்ளார்.
மலேசிய குடிநுழைவுத்துறையில் ஊருவியுள்ள ஊழல் பெருச்சாளிகளை முற்றாக துடைத்தொழிக்கும் நடவடிக்கையாக இந்த மாபெரும் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஒரே இடத்தில் பல ஆண்டு காலமாக பணியாற்றி வரும் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்படுவர்.
குடிநுழைவுத்துறையில் SOP நடைமுறைகளில் எத்தகைய மாற்றங்களை செய்ய முடியும் என்று ஆராயப்படும் என்று டத்தோ ஜகாரியா குறிப்பிட்டார்.
விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்களிடம் எவ்வித சோதனை நடத்தப்படாமல் அவர்கள் நேரடியாக நாட்டிற்குள் நுழைவதற்கு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மத்தியில் நிகழ்ந்ததாக கூறப்படும் செட்டிங் முகப்பிட மோசடிகளை தொடர்ந்து இந்த சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
செட்டிங் மோசடிகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம், இதுவரையில் 49 குடிநுழைவு அதிகாரிகளை கைது செய்துள்ளது.
அந்த 49 அதிகாரிகளில் உயர் பதவி வகிக்கும் பெண் ஒருவர், தனது வீட்டின் படுக்கையறை கட்டிலின் அடியில் 8 லட்சம் வெள்ளி ரொக்கத் தொகையை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.