செப்டம்பர் 28-
நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்பட பலரும், அஜித் ஐரோப்பாவின் ஜிடி4 கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்து, வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஒரு பக்கம் “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாயில் அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்ட காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

நடிகர் அஜித் ஏற்கனவே பல கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்க இருப்பதை கேட்டு, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், “விடாமுயற்சி” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதேபோல் “குட் பேட் அக்லி” படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.