குளுவாங் , அக்டோபர் 01-
மலேசிய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்களில் ஒருவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்குவார் என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் ஆருடம் கூறியுள்ளார்.
முந்தைய மூன்று பிரதமர்களான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் துன் மகாதீர் முகமது ஆகியோரை விட டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகம், தொடர்ந்து நீண்ட, நெடியப்பயணத்தை மேற்கொள்ளும் என்று மலேசிய வரலாற்றில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் எதிர்கட்சி எம்.பி.யாக விளங்கிய லிம் கிட் சியாங் கணித்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டு காலகட்டத்தில் ஐந்து பிரதமர்களை மலேசியா கண்டுள்ளது. அந்த ஐந்து பிரதமர்களில் மூவருடன் ஒப்பிடுகையில் நீண்ட காலம் சேவையாற்றிய பெருமையை அன்வார் பெறுகிறார். அதுமட்டுமின்றி மலேசிய வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றக்கூடிய பெருமையையும் அன்வார் இனி பெறுவார் என்று DAP- யின் முன்னாள் பொதுச் செயலாளருமான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
நேற்று ஜோகூர், படு- பஹாட் – டில் சீன சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லிம் கிட் சியாங் மேற்கண்டவாறு கூறினார்.
லிம் கிட் சியாங் உரையின் நகல், இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் நாட்டின் பத்தாவது பிரதமர் என்ற முறையில் அன்வார் மேற்கொண்டுள்ள இந்த அரசியல் பயணத்தில் அவருக்கு மிகப்பெரிய சவால்களும், சோதனைகளும் காத்திருக்கின்றன என்பதையும் லிம் கிட் சியாங் நினைவுறுத்தினார்.