பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 03-
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரனுக்கு, அந்நாட்டு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 12 மாதச் சிறைத்தண்டனை விதித்தது.
திருத்தப்பட்ட ஐந்து லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த 62 வயது ஈஸ்வரன், தனக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இன்று காலை 10.40 மணியளவில் உயர் நீதிமன்ற நீதிபதி வின்சென்ட் ஹூங், இத்தீர்ப்பினை வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஓர் ஆண்டுத் தண்டனைக்கான தீர்ப்பை வழங்கியபோது, கடும் தண்டனையை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பும், / தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று தற்காப்புத் தரப்பும் / கோரிய தண்டனை முறையை தம்மால் ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதி ஹூங், அவருக்கு 12 மாதத் தண்டனையை விதித்தார்.
சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகளின் திறன்மிக்க நிர்வாகத்திற்கு நம்பிக்கையும், நம்பகத்தன்மையும் அடிப்படைக் கொள்கைளாகும்.
அதிலும் அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய கேந்திரத்தின் பணியாளர்களாக இருக்கின்ற அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசாங்கம் சார்பில் வீற்றிருக்கின்ற அதன் பிரதிநிதிகள் நம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் ஒரு போதும் முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இதுவே சிங்கப்பூரின் கொள்கையாகும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட 12 மாத சிறைத் தண்டனையைத் தொடர்ந்து அவரின் தண்டனைக்கால அமலாக்கம் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அவர், நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
சிங்கப்பூரின் அமைச்சர் என்ற முறையில் ஈஸ்வரன் அரசு சேவையில் இருந்த போது விலை மதிப்புள்ள பொருட்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டதாக அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதேவேளையில் விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாக மேலும் ஒரு குற்றச்சாட்டு ஈஸ்வரனுக்கு எதிராக சுமத்தப்பட்டது.
ஹோட்டல் தொழிலதிபரும், சிங்கப்பூரில் F1 கார்ப் பந்தயங்களை நடைபெற முக்கிய காரணமாக இருந்தவருமான பெரும் செல்வந்தர் ஓங் பெங் செங் மற்றும் Lam Sang Holdings நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் David Lam ஆகியோரிடமிருந்து ஈஸ்வரன் சிங்கப்பூர் பணமான 4 லட்சம் வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார். அந்தக் குற்றங்களை ஈஸ்வரன் ஒப்புக்கொண்டுள்ளார்.
62 வயது ஈஸ்வரன், சிங்கப்பூரில் 50 ஆண்டுகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆளான முதல் அரசியல் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.