சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவு – காவல் நிலையத்தில் என்ன நடந்தது?

ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை என் மகள் மீது ஒருவித ஒவ்வாத நாற்றம் வீசியது. என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கழிவறை சென்றுவிட்டு கை, கால்களைக் கழுவி வருமாறு அவளிடம் கூறினேன்.

ஆனாலும், நாற்றம் போகவில்லை. ஒருவேளை சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஏதேனும் பிரச்னையாக இருக்கலாம் என மருத்துவரிடம் சென்று பார்த்தோம்” உடைந்து அழுதார் சிறுமியின் தாய்.

பெண் மருத்துவர் 10 வயதான அந்தச் சிறுமியைப் பரிசோதித்தார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ததாக, சிறுமியின் தாயார் தெரிவித்தார். “குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்” எனக் கூறிவிட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைத்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமி அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர், விசாரணை என்ற பெயரில் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் அண்ணாநகர் மகளிர் போலீஸ், சிறுமியின் பெற்றோரை அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இதை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. எனினும், காவல்துறை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

போக்சோ வழக்கில் என்ன நடந்தது?

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பேசுவதை மருத்துவமனை லிஃப்டின் ஓரம் நின்று மகளிர் போலீசார் வீடியோ எடுத்ததாகவும் அப்போது சிறுமியின் பெற்றோர் அருகில் இல்லை எனவும் பிபிசியால் பார்க்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுமியின் வாக்குமூலம் தொடர்பான ஆடியோவும் இணையதளங்களில் வெளியானது.

“இதற்கு யார் காரணம் என என் மகளிடம் கேட்டேன். பக்கத்து வீட்டைச் சேர்ந்த சதீஷ் எனும் தண்ணீர் கேன் சப்ளை செய்பவர்தான் காரணம் எனக் கூறினாள். அவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. அவர் மீது போலீசார் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார் சிறுமியின் தாய்.

ஆனால், தங்களை மகளிர் போலீசார் கடுமையாக தாக்கியதாகக் கூறுகிறார் சிறுமியின் தாய். “என் மகளிடம் வாக்குமூலம் வாங்க வந்த பெண் போலீசார், மூன்று வெள்ளைத் தாள்களில் கையெழுத்து கேட்டனர். ஏன் எனக் கேட்டதும் தாளை கிழித்துப் போட்டுவிட்டுச் சென்றனர்” என்கிறார்.

இதன்பிறகு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு அண்ணா நகர் மகளிர் காவல்நிலையத்துக்கு சிறுமியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.

‘கையை முறுக்கி அடித்தனர்’

“இரவு 12 மணிக்கு இன்ஸ்பெக்டர் வந்தார். என்னை மகளிர் போலீசார் உள்ளே கூட்டிச் சென்று கையை முறுக்கி அடித்தார்கள். அழுதுகொண்டே வெளிய வந்தேன். 1 மணிக்கு மருத்துவமனைக்குச் சென்றால் ஐ.சி.யு வார்டுக்கு பக்கத்தில் இருக்கும் லிஃப்ட் ஓரத்தில் என் மகளை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்,” என்கிறார்.

“இப்படியெல்லாம் விசாரிக்கலாமா?’ என்று கேட்டேன். அப்போது என்னுடன் வந்த ஒருவருடன் என்னைத் தொடர்புப்படுத்தி தகாத முறையில் பேசினார்கள். மறுநாள் என் கணவரை காவல்நிலையத்திற்கு வரவைத்து அடித்தார்கள்” என்கிறார் சிறுமியின் தாய்.

WATCH OUR LATEST NEWS