புத்ராஜெயா,அக்டோபர் 03-
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் நீடிக்கும் என்று மலேசிய வானிலை இலாகாவான MetMalaysia தெரிவித்துள்ளது.
இது, இடியுடன் கூடிய அடைமழையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் மழை பெய்து விட்ட நிலையில் நாட்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்படும். பல இடங்களில் குடிநீர் பஞ்சமும் ஏற்படலாம்.
எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மலேசியாவின் வட மாநிலங்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்ததால், கெடா, பெர்லிஸ், பினாங்கு, பேரா ஆகிய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய கிழக்குகரையோர மாநிலங்களில் கடும் மழை பெய்யும். பின்னர் ஜனவரி மாதம் ஜோகூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று MetMalaysia ஆருடம் கூறியுள்ளது.