கோலாலம்பூர், அக்டோபர் 05-
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பண வீக்கம் மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.
இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிகையில் மலேசியாவில் சமையல் எண்ணெய், பெட்ரோல் மற்றும் மாவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மலிவாக இருந்தாலும், வருமான அளவை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டில் உற்பத்தித் திறன் மற்றும் முதலீடு அதிகரித்தாலும் வருமான அளவு உயராமல் இருந்து வருகிறது. எனவே வரும் அக்டோபர் 18 ஆம் தேதி சமப்பிக்கப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் சம்பள உயர்வுக்கு அதீத கவனம் செலுத்துவதாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
அரசு ஊழியர்களுக்கு அண்மையில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். விலைவாசி உயர்வு காரணமாக மக்களிடையே தேங்கி நிற்கின்ற கவலையை போக்கக்கூடிய ஒரு நிவாரணியாக 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் விளங்கக்கூடும் என்று CNBC- க்கு அளித்த பேட்டியில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.