இந்தியப்பிரஜை கடத்தல், எழுவருக்கு எதிரான வழக்கு 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 05-

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தனது சகநாட்டவரை கடத்திச் சென்று பிணைப்பணம் கோரி மிரட்டி வந்ததாக நம்பப்படும் 7 இந்தியப் பிரஜைகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அந்த 7 இந்தியப்பிரஜைகளும் மாஜிஸ்திரேட் அமீரா அப்துல் அஜீஸ் முன்னிலையில் நிறுத்துப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

எனினும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மையை புரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் தடுமாறியதால் மொழிப்பெயர்ப்பாளரை அமர்த்துவதற்கு ஏதுவாக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த எழுவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை. வழக்கு விசாரணை நடைபெறும் வரையில் அந்த எழுவரையும் சுங்கைப்பூலோ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

தாம் வாங்கிய 20 ஆயிரம் வெள்ளி கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பில் அந்த இந்தியப்பிரஜையை சம்பந்தப்பட்டவர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக, அந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளையை சம்பந்தப்பட்ட கும்பல், அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் தடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நபர், தாம் பெற்ற கடனை, இந்தியாவில் உள்ள தமது தாயார் மூலம் முழுமையாக அடைக்கப்பட்டப் பின்னரும் அந்த நபரை சம்பந்தப்பட்ட கும்பல் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது

WATCH OUR LATEST NEWS