அக்டோபர் 08
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நிகழ்வையொட்டி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். எங்கே பிரச்னை ஏற்பட்டது?
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தைப் பார்ப்பதற்காக திருவொற்றியூரில் இருந்து கணவருடனும் குழந்தையுடனும் வந்த சிவரஞ்சனி இப்போது நொறுங்கிப் போய் நிற்கிறார். விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு, கூட்டம் அதிகமாக இருந்ததால் மனைவியையும் குழந்தைதையும் ஓரிடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு, இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்ற கணவர் கார்த்திகேயன் திரும்ப வரவேயில்லை.
திருவொற்றியூர் ஆர்.எம்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். அவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் வேதிக் கிருஷ்ணா என்ற இரண்டரை வயது மகனும் இருக்கின்றனர். விமான சாகசக் காட்சியைப் பார்ப்பதற்காக தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கார்த்திகேயன், சிவரஞ்சனி, அவர்களுடைய குழந்தை ஆகிய மூவரும் மெரினாவுக்கு வந்தனர்.
விமான சாகசம் முடிந்ததும், எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் பல இடங்களிலும் நெரிசல் ஏற்பட்ட நிலையில், மனைவியை சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரில் நிற்கச் சொல்லிவிட்டு, சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துவருவதற்காகச் சென்றிருக்கிறார் கார்த்திகேயன்.

ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து விட்டது’
ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆகியும் அவரிடம் இருந்து தகவல் ஏதும் வரவில்லை. அந்தப் பகுதியில் லட்சக்கணக்கானவர்கள் குவிந்திருந்ததால், கார்த்திகேயனை சிவரஞ்சனியால் செல்போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இரண்டரை மணிவாக்கில் கார்த்திகேயனின் செல்போனைத் தொடர்புகொள்ள முடிந்தாலும், அதனை யாரும் எடுக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, அதனை எடுத்துப் பேசிய ஒருவர், கார்த்திகேயன் தரையில் மயங்கி விழுந்திருப்பதாக சொன்னார்.
பதறியடித்து சிவரஞ்சனி அங்கே சென்றபோது, கார்த்திகேயன் ஒரு பிளாட்பாரத்தில் விழுந்து கிடந்தார். “நாங்கள் நின்ற இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே அவர் கிடந்தார். அப்படியானால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாரும் அவரைக் கவனிக்கவில்லை. காவல்துறையையும் மற்றவர்களையும் நம்பித்தானே இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம்?” எனக் கேள்வியெழுப்புகிறார் சிவரஞ்சனி.

இதற்குப் பிறகு அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்கென சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
கார்த்திகேயனின் தந்தை கொரோனா காலகட்டத்தில்தான் மரணமடைந்திருந்த நிலையில், தாய் கீதாவும் கார்த்திகேயனை நம்பியே வாழ்ந்துவந்தார். “எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் கார்த்தியை நம்பித்தான் வாழ்ந்துவந்தோம். இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டரை வயதுக் குழந்தைக்கு யார் பதில் சொல்வது?” என்கிறார் கீதா.
கார்த்திகேயனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. வெயிலின் தாக்கமா அல்லது நீரிழப்பா அல்லது வேறு காரணங்களா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவரக்கூடும்.