கோலாலம்பூர், அக்டோபர் 09-
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சட்டத்தை மீறிய நிலையில் தாங்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள 137 பூர்வக்குடியினர், தாங்கள் மதம் மாற்றப்பட்டதை எதிர்த்து முழு வீச்சில் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அந்த 137 பூர்வகுடியினர் தொடுத்துள்ள இவ்வழக்கு விசாரணையில் அடிப்படை தகுதிபாடுயிருப்பதால் இதனை மீண்டும் விசாரணை செய்வதற்கு குவந்தான் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ S. நந்தபாலன், குவந்தான் உயர் நீதிமன்றம், இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஒராங் அஸ்லி படேக் மாயா இனத்தைச் சேர்ந்த அந்த 137 பூர்வக்குடியினர் தாங்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டதைத் எதிர்த்து கூட்டரசு அரசாங்கம், ஓராங் அஸ்லி மேம்பாட்டு இலாகா, அதன் இயக்குநர், அதிகாரிகள் மற்றும் பகாங் மாநில இஸ்லாமிய சமய மன்றம் ஆகிய ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக தொடுத்திருந்த இவ்வழக்கை கடந்த ஆண்டு குவந்தான் உயர் நீதிமன்றம், தகுதிபாடுயில்லை என்று காரணம் கூறி, தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து அந்த 137 பூர்வக்குடியினரும் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் வழக்கு மனு இன்று விசாரணை செய்யப்பட்டதில், ஓராங் அஸ்லிகளின் அடிப்படை உரிமை சார்ந்த இந்த வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அப்பீல் நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு படிபறிவு இல்லாத சமூகமாக பகாங், கோலா லிபிஸ், மெராபோ, கம்பங் பெஞ்சம் கெலுப் பூர்வக்குடி கிராமத்தில் இருந்து வந்த தாங்களும் தங்கள் மூதாதையர்களும் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தில் மதம் மாற்றப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
முதலில் 57 பேர் மதம் மாற்றப்பட்டனர். பின்னர் தங்கள் பிள்ளைகள் இயல்பாகவே இஸ்லாம் மதத்தினர் என்று கூறி, பிறப்புப்பத்திரமும், அடையாளகார்டும் வழங்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
தங்கள் பிள்ளைகள் ஓரளவு படிக்கத் தெரிந்தப் பின்னரே தாங்கள் மதம் மாற்றப்பட்ட விவகாரம் அவர்களின் அடையாளகார்டு மூலம் தங்களுக்கு தெரியவந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு முன்னதாக 1993 ஆம் ஆண்டு ஓராங் அஸ்லி மேம்பாட்டு இலாகாவின் உத்தரவின் பேரில் இரண்டு கிராமத் தலைவர்கள் மூலம் தாங்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாகவும், அவ்வாறு செய்ய தவறினால் அந்த கிராமத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படாது என்று கூறி தாங்கள் மிரட்டப்பட்டு வந்ததாகவும் அவர்கள் தங்கள் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளையில் மதம் மாற்றப்பட்டால் பின்னாளில் தாங்களும், தங்கள் பிள்ளைகளும் எதிர்நோக்கக்கூடிய இடர்கள் குறித்து அன்றைய நாளில் தங்களுக்கு விளக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்.
தாங்கள் எந்த சமயத்திலும் இஸ்லாத்தைப் பின்பற்றவிலை என்றும் இன்னமும் தங்கள் சமயமான படேக் மாயா- வை வழிபட்டும், அதன் காலச்சார கூறுகளை கடைப்பிடித்தும் வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனினும் இந்த 137 பூர்வக்குடியினரும் கூறியுள்ள குற்றச்சாட்டு கடுமையானது என்றும், வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுவதால் இதனை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறி அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ நந்தபாலன் இவ்வழக்கை குவந்தான் உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் அனுப்பிவைத்துள்ளார்.