பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டியிருப்பதாக கூறப்படும் அனைத்துலக ஊடகமான Bloomberg- கின் பிரதிநிதி, விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீஸ் துறை இன்று அறிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக அம்னோ முன்னாள் தலைவர் இஷாம் ஜலீல், சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து, இது குறித்து SPRM, போலீசில் புகார் செய்து இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இருவரிடம் மட்டுமே தாங்கள் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட ருஸ்டி முகமட் , / ஒருவர், புகார்தாரரான SPRM அதிகாரி, மற்றொருவர் அம்னோ முன்னாள் தலைவர் இஷாம் என்று ருஸ்டி முகமட் விளக்கினார்.
இன்னும் சில தனிநபர்களை விசாணை செய்வதற்கான சாத்தியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, அவரின் இரண்டு புதல்வர்கள் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்- ஆகியோரிடம் விசாரணை நடத்தும்படி SPRM- மிற்கு டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவிட்டுள்ளதாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் தமது முன்னாள் அரசியல் செயலாளர்ஃபர்ஹாஷ் வஃபா சால்வடார் ரிசல் முபாரக் – கை விசாரணை செய்ய வேண்டாம் என்று SPRM- மிற்கு அன்வார் உத்தரவிட்டதாக பிரதமரை மேற்கோள்காட்டி அந்த அனைத்துலக ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தாக கூறப்படுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.