2028 ஆம் ஆண்டுக்குள் அதிக வருமானம் பெறுகின்ற நாடாக மலேசியா திகழும் / உலக வங்கி ஆருடம்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-

துரித வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் ஒன்றான மலேசியா,/ வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் அதிக வருமான பெறுகின்ற நாடுகளில் ஒன்றாக விளங்கும் என்று உலக வங்கி, திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மலேசிய ரிங்கிட்டின் செயல்திறன் மற்றும் அடைவு நிலை, தற்போது இருப்பது போல தொடர்ந்து வலுவடையத் தொடங்குமானால் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிக வருமானம் பெறுகின்ற நாடு என்ற அந்தஸ்தை மலேசியாவினால் அடைய முடியும் என்று உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் ஆருடம் கூறியுள்ளனர்.

2028 ஆம் ஆண்டு என்பது ஒரு கணிப்புதான் என்றாலும் ஓராண்டுக்கு முன்னதாகவே அந்த அந்தஸ்தை மலேசியா பெற்று விடும் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.

இந்த கணிப்பின்படி மலேசியாவின் தற்போதைய சராசரி வளர்ச்சி விகிதம் 4.3 விழுக்காடாக இருக்கும் அதேவேளையில் ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் ரிங்கட் மதிப்பு 4 வெள்ளி 54 காசாக இருந்து வருகிறது.

ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து 4 வெள்ளி 20 காசை எட்டும் நிலை ஏற்பட்டால் எதிர்பார்த்த இலக்கை விட ஓராண்டுக்கு முன்னதாகவே அதிக வருமானம் பெறுகின்ற நாடு என்ற அந்தஸ்தை மலேசியாவினால் எளிதில் உயர்த்திப்பிடிக்க முடியும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

உலக வங்கி, 2024 ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் முன்னறிவிப்பை 4.3 விழுக்காட்டிலிருந்து 4.9 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

மலேசியாவில் தற்போது நிலவி வரும் நேர்மறையான பொருளாதார உத்வேகம், அதிகரித்து வரும் அரசியல் நிலைத்தன்மை, உயர்ந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள், சாதகமான கொள்கை சூழல் ஆகியவை மலேசியாவின் உயர் வருமான அந்தஸ்துக்கு முக்கிய காரணியாக தற்போது இருந்து வருகிறது என்று உலக வங்கி கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS