அம்பாங்,அக்டோபர் 10-
காருக்குள் வாந்தி எடுத்ததற்காக கண்டித்த e-hailing வாகன ஒட்டுநர், இரு அந்நிய நாட்டவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், கம்போங் சேரஸ் பாரு-வில் நிகழ்ந்தது. காயமுற்ற அந்த e-hailing ஓட்டுநர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பின்னிரவு 12.40 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் – லிருந்து கம்போங் சேரஸ் பாரு- ஆடம்பர அடுக்குமாடி வீட்டை நோக்கி அந்த இரு அந்நியர்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு e-hailing ஓட்டுநர் சென்று கொண்டிருந்த போது , அவ்விரு அந்நியர்களில் ஒருவர் காருக்குள்ளேயே வாந்தி எடுத்துள்ளார்.
சாலையோரத்தில் காரை நிறுத்திய வாகனமோட்டி, அது குறித்து கண்டித்ததைத் அவர், அந்த இரு நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி முகமது ஆசம் குறிப்பிட்டார்.