இந்த மனுஷன யாராவது நிறுத்த சொல்லுங்கப்பா.. 6வது இரட்டை சதம் விளாசிய ஜோ ரூட்.. கதறிய பாகிஸ்தான்!

அக்டோபர் 10-

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான ஜோ ரூட் தனது 6வது இரட்டை சதத்தை விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல் இளம் வீரரான ஹாரி ப்ரூக்கும் முதல்முறையாக இரட்டை சதம் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார்.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 556 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷஃபீக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது முல்தான் மைதானத்தில் பவுலர்களுக்கு எந்த உதவியும் இல்லை, தார் ரோட்டை போல் பிட்ச் அமைக்கப்படுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்களான பீட்டர்சன், நாசர் ஹுசைன் கொந்தளித்தனர். இதன்பின் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.

3வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 492 ரன்களை குவித்திருந்தது. ஜாம்பவான் வீரரான ஜோ ரூட் 176 ரன்களுடனும், இளம் வீரரான ஹாரி ப்ரூக் 141 ரன்களுடன் தான் களத்தில் இருந்தனர். இதன்பின் 4வது நாளிலாவது பிட்ச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏதாவது உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் இருவரும் அதிரடியாக பேட்டிங் செய்ய தொடங்கினர். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அதிக இரட்டை சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு ஜோ ரூட் முன்னேறியுள்ளார்.

இன்னொரு பக்கம் பவுண்டரிகளாக விளாசி தள்ளிய ஹாரி ப்ரூக் 245 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டி சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் மண்ணில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரி ப்ரூக் 3 சதங்கள், ஒரு இரட்டை சதம் விளாசி சம்பவம் செய்துள்ளார். தொடர்ந்து மறுமுனையில் ஜோ ரூட் 353 பந்துகளில் 250 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்காக அதிக முறை 250 ரன்களுக்கு மேல் குவித்துள்ள வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். 4வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 658 ரன்களாக உள்ளது. இதன் மூலமாக 102 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி, அடுத்தடுத்த செஷன்களில் கூடுதல் அதிரடியுடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS