தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த விருதை குடியரசு தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதன் பின், அவர் அளித்த பேட்டியில், மீண்டும் தனுஷுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது

தற்போது, இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை நித்யா மேனன் பெற்றுள்ளார். விருது பெற்றபோது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“தேசிய விருதுக்கு காரணம், கேரக்டரை சரியாக புரிந்து கொண்டு, இயற்கையாக நடிப்பதுதான். முதல்முறையாக விருது வாங்கியதால், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதுவரை நான் நடித்ததற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறேன். எந்த ஒரு கலைஞருக்கும் விருது முக்கியமானது. அதிலும், தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளதை அடுத்து, இந்த விருதை என் படக்குழுவினருக்கு சமர்ப்பிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனுஷுடன் நடித்த படத்திற்காக, தேசிய விருது கிடைத்த நிலையில் மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, தனுஷ் நடித்து, இயக்கி வரும் ’இட்லி கடை’ படத்தில் நித்யா மேனன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.