சனி, ஞாயிறு விடுமுறையில் உடன்பாடுயில்லையா? / வேறு மாநிலத்திற்கு இடம் மாறுங்கள் / ஜோகூர் இடைக்கால சுல்தான் நினைவுறுத்து

ஜொகூர், அக்டோபர் 11-

ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறை நாட்கள், மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளின் அனுசரிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவில் உடன்பாடு இல்லாதவர்கள், வேறு மாநிலங்களுக்கு இடம் மாறலாம் என்று இடைக்கால ஜோகூர் சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.

மாமன்னரின் அனுமதி மற்றும் அவரின் அங்கீகாரத்துடன் ஜோகூர் இஸ்லாமிய சமய மன்றம் மற்றும் ஜோகூர் மாநில அரசாங்கம் ஆகியவற்றின் கருத்துகளை கேட்டறிந்தப்பின்னரே தற்போது அனுசரிக்கப்பட்டு வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய வார விடுமுறை நாட்களை மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றுவதற்கு தாம் முடிவு செய்ததாக துங்கு இஸ்மாயில் தெளிவுபடுத்தினார்.

ஜோகூர் மாநிலத்தின் வார விடுமுறை நாட்கள் மாற்றப்பட்ட விவகாரத்தில் தங்களின் சொந்த நலன் சார்ந்த விவகாரங்களுக்காக உடன்பாடு இல்லாதவர்கள் அல்லது அதிருப்தி கொண்டவர்கள், தங்களுக்கு தோதுவாக வேறு மாநிலங்களுக்கு இடம் மாறிச்செல்லலாம் என்று துங்கு இஸ்மாயில் கேட்டுக்கொண்டார்.

தாம் எடுத்துள்ள இந்த முடிவு, ஜோகூர் மாநில மக்களின் நலனை முன்நிறுத்தி செய்யப்பட்டதாகும். மாநில மக்கள் அன்றைய தினம், தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவது, மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைக்கு உந்தும் சக்தியை ஏற்படுத்துவது முதலிய அம்சங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும் என்று துங்கு இஸ்மாயில் தெளிவுபடுத்தினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜோகூர் மாநில வார விடுமுறை மாற்றப்பட்ட விவகாரத்தில் பிகேஆர் பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பின்ர் ஹசன் அப்துல் கரீம் அண்மையில் கடுமையாக குறைகூறியிருந்தார்.

வார விடுமுறை மாற்றப்பட்ட விவகாரத்தில் தமக்கு உடன்பாடுயில்லை என்று அந்த சட்ட வல்லுநர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS