செரம்பான் ,அக்டோபர் 11-
தனது ஆறு வயது மகளை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த ஒரு தனித்து வாழும் தாயாரான 39 வயது இந்திய மாது, அந்த கொலைக்குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.
A. மாரியம்மா என்ற அந்த மாது, தனது மகளை கொலை செய்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்களை நிரூபிக்க, பிராசிகியூஷன் தரப்பு தவறியத்தைத் தொடர்ந்து அந்த மாதுவை எதிர்வாதம்செய்ய அழைக்கப்படாமலேயே வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக சிரம்பான், உயர் நீதமன்ற நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை மணி 5.30 க்கும் 6.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் சிரம்பான் அருகில் Senawang- கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனது ஆறு வயது மகளை கொன்றதாக மாரியம்மா குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் மாரியம்மா குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
உயிரிழந்த சிறுமி கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சித்ரவதைக்கு ஆளாகி வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரின் தலையில் பலம் கொண்டு அடித்ததன் காரணமாக அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம்மை விடுதலை செய்த நீதிமன்றத்திற்கும், வழக்கறிஞருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்ட மாரியம்மா, இந்த கொலையை தாம் செய்யவில்லை என்று மறு உறுதிப்படுத்தினார்.
கடந்த 4 ஆண்டு காலமாக சமூக நல இலாகாவின் பராமரிப்பில் இருந்து வரும் தம்முடைய இதர இரண்டு குழந்தைகளை காண்பதற்கு தற்போது அந்த சமூக நல இல்லத்திற்கு செல்லவிருப்பதாக விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாரியம்மா, மிக உருக்கமாக இதனை தெரிவித்தார்.