பூஜாங் பள்ளத்தாக்கிற்கு பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஒரு நாள் சுற்றுலா

செபரங் பேராய்,அக்டோபர் 11-

பினாங்கு மாநிலத்தில் செபரங் பேராய் மாவட்டத்தில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜாங் பள்ளத்தாக்கிற்கு ஒரு நாள் சுற்றுலாவை இன்று காலையில் மேற்கொண்டனர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தினால் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 6 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்த ஒரு நாள் சுற்றுலாப் பயணத்தை பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ, கொடியசைத்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் R.S.N. ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், வாரியத்தின் இதர ஆணையர்களான பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், டத்தோ ஜே. தினகரன், தேசிய பதிவு இலாகா அதிகாரி சக்திவேல் மற்றும் செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் லிங்கேஸ்வரன் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


மலேசியாவின் வடபகுதியான கெடா மாநிலத்தில் அமைந்துள்ள கடாரம்கொண்டான் என்றழைக்கப்பட்ட ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் என்ற பூஜாங் பள்ளத்தாக்கு குறித்து தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் அறிந்துவைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கல்விச்சுற்றுலாவை பினாங்கு இந்து அறப்பணிவாரியம் ஏற்பாடு செய்தது.

ஐந்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் மாணவர்கள் பூஜாங்பள்ளத்தாக்கை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக பூஜாங் பள்ளத்தாக்கு குறித்து * சோழன் வென்ற கடாரம் * என்ற நூலை எழுதி, தமிழர்களின் பண்டைய வரலாற்றுக்கு பெருமை சேர்ந்துள்ள முன்னாள் ஆசிரியரும், வழக்கறிஞருமான வரலாற்று ஆய்வாளர் டத்தோ வீ. நடராஜன் விளக்கம் அளித்தார்.

துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங், RSN ராயர் மற்றும் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோரின் உரைக்கு பின்னர் ஜக்டீப் சிங் மற்றும் இதர பொறுப்பாளர்கள் கொடியசைத்து மாணவர்களின் பேருந்து பயணத்தை தொடக்கிவைத்தார்.

முன்னதாக, மாணவர்கள் தமிழுக்கும், தமிழ் அன்னைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே! என்ற தமிழ் வாழ்த்துப்பாடலை ஒருசேர பாடி, தங்களின் ஒரு நாள் சுற்றுப்பயணத்திற்கு முத்தாய்ப்பு வைத்தனர்.

Merbok நதி மற்றும் Muda நதி ஓரங்களிலும் அவற்றின் கிளை நதிகளிலுன் ஓரங்களிலும் நடத்தப்பட்ட ஆகழ்வாராச்சிகளிலும், அவற்றின் மூலம் கிடைத்த பண்டையப் பொருட்களின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டு, இந்திய வர்த்தகர்கள் முதலாம் நூற்றாண்டு முதல் தங்கள் கலாச்சாரத்தையும், சமயத்தையும் பூஜாங் பள்ளத்தாக்கிற்கு கொண்டு வந்துள்ளனர் என்பதை வீ. நடராஜாவின் வரலாற்று நூல் சித்திரிக்கிறது.

அந்த வரலாற்று நூல் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியின் நூலகத்திலும் வைக்கப்படுவதற்கு அந்த நூலை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வாங்கும் என்ற RSN ராயர் தமது உரையில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS