சிரம்பான் , அக்டோபர் 11-
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி, 10 ஆம் தேதி வரை ஜப்பான், கடலோர மாநிலமான Kagoshima-வில் Izumi City நகராண்மைக்கழகத்திற்கு சிரம்பான் மாநகர் மன்ற பேராளர்கள் குழுவினர மேற்கொண்ட பயணத்தில் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும், Repah சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியமும் பங்கேற்றார்.


இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமானது, நகர நிர்வகிப்பு, குப்பைக்கூளங்கள் நிர்வகிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப நிர்வகிப்பு ஆகிய துறைகளில் நிலைத்தன்மை கூறுகளில் ஒத்துழைப்பு கொள்வதாகும்.
வெளிநாட்டு ஊராட்சி மன்றங்களுடன் சிரம்பான் மாநகர் மன்றம் கொள்ளும் ஒத்துழைப்பானது, நீண்ட பயணத்தில் கிடைக்கக்கூடிய பலாபலன்களை சிரம்பான் மாநகர் மன்றத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதாகும் என்று வீரப்பன் விளக்கினார்.


சிரம்பான் மாநகர் மன்றத்திற்கும், ஜப்பான் Izumi City நகராண்மைக்கழகத்திற்கும் இடையில் கலாச்சாரம், முதலீடு மற்றும் கல்வி ஆகியவற்றில் கொள்ளப்படும் ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டு இரண்டு மன்றங்களும் இந்த இரட்டை நகர் திட்டத்தில் இணைந்து இருப்பதை வீரப்பன் சுட்டிக்காட்டினார்.



இந்தப் பயணத்தில் சிரம்பான் மாநகர் மன்ற செயலாளர் மாஸ் மித்யவான் பின் யாஹ்யா மற்றும் அதன் உயர் அதிகாரிகளும் பங்கு கொண்டதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

