2025 ஆம் ஆண்டுக்கான மித்ரா மானிய விண்ணப்பங்கள் ஏற்பு ஒத்திவைக்கப்பட்டது

அக்டோபர் 11-

இந்தியர்களின் சமூக, பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் 2025 ஆம் ஆண்டுக்கான சமூகவியல் மேம்பாட்டுத்திட்டங்களுக்கு மானியம் கோரி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாச நாள், ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை இம்மாதம் 15 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி, வரும் நவம்பர் 14 ஆம் தேதி பிற்பகல் 5 மணி வரையில் சமர்ப்பிக்கலாம் என்று கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் மித்ரா கேட்டுக்கொண்டது.

எனினும் விண்ணப்பங்கள் வரவேற்பு, ஒத்திவைக்கப்படுவதாக மித்ரா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 6 மாநிலங்களைச் சேர்ந்த அரசாங்க சார்பற்ற அமைப்புகள் மற்றும் இதர நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் மித்ரா அண்மையில் சந்திப்பு ஒன்றை நடத்தியது.

அதேவேளையில் மித்ராவின் சிறப்பு பணிக்குழுவிற்கு தலைமையேற்றுள்ள Batu நாடாளுமன்ற உறுப்பினர் P. பிரபாகரன் மற்றும் மித்ரா தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி ஆகியோர் இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார மேம்பாடு மற்றும் மித்ரா மானிய விண்ணப்பம் தொடர்பாக பலதரப்பட்ட கருத்துகளையும் உள்ளீடுகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெற்றுள்ளனர்.

இதன் தொடர்பில் மானிய விண்ணப்பத்தில், அதன் நடைமறைகள் சிலவற்றை வளப்படுத்தும் வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான மித்ரா மானிய விண்ணப்ப வரவேற்பை ஒத்திவைப்பதாக முடிவு செய்துள்ளனர்.

மித்ரா மானிய விண்ணப்பம் தொடர்பில் மற்றொரு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மித்ரா நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS