கோலாலம்பூர், அக்டோபர் 14-
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்தியா, ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர், கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஆள்விழுங்கும் பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்து காணாமல் போன சம்பவம் தொடர்பான நில அமிழ்வு குறித்து அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம், தீயணைப்பு, மீட்புப்படையனர், பொது தற்காப்புப்படையினர் மற்றும் போலீஸ் துறையினர் ஆகிய தரப்பினரின் பின்னூட்டத்தை உள்ளடக்கிய அந்த ஆய்வறிக்கை தயாரிப்பு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக கூட்டரசுப்பிரதேசத்திற்கு தலைமையேற்று இருப்பவருமான அமைச்சர் டாக்டர் ஜாலிஹா விளக்கினார்.
இவ்விவகாரத்தில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் புலன் விசாரணையில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும். அந்த வகையில் அந்த நில அமிழ்வு சம்பவம் தொடர்பாக அறிக்கை மிக கவனமாக தயாரிக்கப்பட்டு வருவதாக இன்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது டாக்டர் ஜாலிஹா மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
இச்சம்பவத்தில் காணாமல் போன இந்தியப் பிரஜை விஜயலெட்சுமியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து கேட்ட போது, அந்த குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி சுமையை குறைக்கும் வகையில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மூலமாக அரசாங்கம் 30 ஆயிரம் வெள்ளி கருணை நிதியை வழங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தவிர தனியார் துறையினரும் அந்த குடும்பத்திற்கு பத்தாயிரம் வெள்ளி வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில் உரிய இழப்பிடு கோரி, கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக விஜயலெட்சுமியின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டாலும் அதற்கு அரசாங்கம் தடை சொல்லாது என்று அமைச்சர் விளக்கினார்.