மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக குறிப்பாக பி 40 பிரிவை சேர்ந்த மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தி வருகின்றது.
இந்திய சமுதாயத்தின் சமூகவில், பொருளாதார உயர்வுக்காக 2024 ஆம் ஆண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தலைமையில் 7 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் முதன்மையானது, ஸ்பூமி கோஸ் பிக் (SPUMI GOES BIG) திட்டமாகும். தொழில் முனைவோர் மேம்பாட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சின் கீழ் உள்ள தெக்குன் நேஷனல் வாயிலாக கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, மொத்தம் 30 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
வணிகத் துறையில் அதிகமான இந்தியர்களை ஈடுபடச் செய்வதிலும், அவர்களின் வியாபாரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவதிலும் SPUMI GOES BIG கடனுதவியை திட்டம் தற்போது முக்கிய பங்கை ஆற்றி வருகிறது.
“பிரமாண்டத்தை நோக்கி SPUMI ” என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்ட இக்கடனுதவித் திட்டத்தில் வணிகத்துறையல் ஈடுபட்டு வரும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், 50 ஆயிரம் ரிங்கிட் முதல் ஒரு லட்சம் ரிங்கிட் வரை விண்ணப்பிக்கலாம். சிறு குத்தகையாளர்கள், விவசாயம் – விவசாயம் சார்ந்த தொழில்துறை, சில்லறை வியாயாரம், சேவைகள், தயாரிப்பு, ஆன்லைன் வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழில்முனைவோர் இந்தக் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஏதுவாக மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டு, தற்போது வெற்றி நடைபோட்டு வருகிறது.
SPUMI GOES BIG திட்டத்திற்கு அரசாங்கம் ஏற்கெனவே 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறைத் துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் அதீத முயற்சிகளின் பலனாக குறுகிய காலத்தில் மேலும் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 60 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் SPUMI GOES BIG திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்தியத் தொழில்முனைவோரைக் கைதூக்கி விடுவதற்கும் அவர்களின் வர்த்தகத் துறைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இந்திய வர்த்தகர்கள் குறிப்பாக தாங்கள் தொடங்கியுள்ள வர்த்தகத்துறையில் முன்னேறத் துடிக்கும் அனைத்து வர்த்தகர்களும் இத்திட்டத்தின் வாயிலாக கடன் உதவிப்பெற்று, தங்கள் தொழில்துறையை விரிவுப்படுத்திக்கொள்ள இத்திட்டம் அடித்தளமிடுகிறது.
இந்த கடனுதவித் திட்டத்திற்கு மனுச் செய்யும் விதிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன என்பது இதன் தனித்துவமான சிறப்பாகும். வணிகம் தொடர்பில் அதிகமான ஆவணங்கள் கோரப்படுவதில்லை. இதன் காரணமாகவே அதிகமான இந்தியர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து, இன்று பலன் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்.
“கடனுதவிக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தோடு விண்ணப்பதாரரின் அடையாளக்கார்டு நகல், எஸ்எஸ்எம் வணிக லைசென்ஸ், நடத்தும் தொழிலின் புகைப்படம், வங்கிக் கணக்கறிக்கை, வங்கிக் கணக்கு எண், 3 மாதங்களுக்குரிய வங்கிப் பரிவர்த்தனை அறிக்கை, உள்நாட்டு வருமான வரி செலுத்தியதற்கான ஆதாரம் – பதிவு எண் ஆகியவற்றை மட்டுமே விண்ணப்பத்தில் இணைக்க வேண்டியுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர இந்திய வர்த்தகர்கள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாகும். தெக்குன் வாயிலாக கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் எந்தவொரு கூடுதல் நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. ஆனால், தெக்குனின் கீழ் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு தொடங்கப்பட்ட SPUMI GOES BIG திட்டத்திற்கு இவ்வாண்டின் மத்தியப்பகுதியில் மேலும் கூடுதலாக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, தற்போது அதன் மொத்த ஒதுக்கீடு 60 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டு இருப்பது மடானி அரசாங்கத்தின் மிகப்பெரிய வெற்றியாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் பெருமிதம் தெரிவித்தார்.
SPUMI என்ற பெயரில் இத்திட்டம் முதலில் செயல்பட்ட போது தெக்குன் நேஷனல் வாயிலாக 29,136 பேர் இதில் பயன்பெற்றனர். இதற்காக 458 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. தற்போது SPUMI GOES BIG என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் தொடங்கிய போது, 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை அதாவது இரண்டு மாத காலக்கட்டத்திலேயே 51 பேருக்கு 2.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
“7.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 81 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 51 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இன்னும் 27 விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. எங்களின் இலக்கின்படி இந்த 60 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட சுமார் 2 ஆயிரம் இந்திய தொழில்முனைவர்கள் பலன் பெற வேண்டும் என்பதே அமைச்சின் இலக்காகும்” என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இந்திய வணிகர்களைப் பொறுத்தவரையில் SPUMI GOES BIG திட்டம், இந்தியர்களுக்கு கைகொடுக்கின்ற, அவர்களை உயர்த்தி விடுகின்ற ஒரு பிரதான திட்டமாகும் என்று அதில் நன்மை அடைந்த சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவர்கள் கூறுகின்றனர்.
இந்த கடனுதவித் திட்டம், தாங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வணிகத்தை விரிவுப்படுத்துதற்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் மனசாட்சியுடன் இவ்வேளையில் மடானி அரசாங்கத்திற்கும், தொழில் முனைவோர் மேம்பாட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சுக்கும், டத்தோஸ்ரீ ரமணனுக்கும் நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தங்கள் நன்றி பாராட்டைத் தெரிவித்துக்கொண்டனர்.

மகிழ்ச்சிக்கடலில் அருண்
சிலாங்கூர், காஜாங் வட்டாரத்தைச் சேர்ந்த வணிகர் அருண் கூறுகையில் “ சிறு தொழிலை விரிவாக்க செய்யவும், மேம்படுத்தவும் பெரிய பங்கை தெக்குன் வாயிலாக SPUMI முக்கிய பங்காற்றி வருகிறது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக 7,000 ரிங்கிட்டை பெற்றேன். இதன் மூலம் எனது ” Event management ” வணிகத்தை விரிவாக்கம் செய்ய முடிந்தது. அந்தக் கடன் உதவியை முழுமையாக செலுத்தியப் பிறகு, இப்பொழுது இரண்டாவது கட்டமாக வெ 30,000 ரிங்கிட்டை பெற்றுள்ளேன். இதன் மூலம் இன்னும் என்னுடைய வணிகத்தை மேம்படுத்த முடியும் என்ற புதிய நம்பிக்கை இப்போது எனக்கு பிறந்துள்ளது.
மடானி அரசாங்கம் மூலம் வழங்கப்பட்ட இந்தக் கடனுதவி, இந்திய வணிகர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. இந்திய வணிகர்களை ஊக்குவிப்பதற்காக இத்திட்டத்தை செம்மையாக அமல்படுத்தி வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அருண் தமது நன்றியை பதிவு செய்தார்.
பலன் பெற்ற மணிவண்ணன்
தெக்குனிலுள்ள ( SPUMI GOES BIG ) எனும் கடன் உதவினால் என்னுடைய விவசாயத்துறையை இன்னும் மேம்படுத்த முடிந்தது என்கிறார் சிரம்பானை சேர்ந்த மணிவண்ணன். “பி40 குழுவைச் சேர்ந்த இந்திய வணிகர்களுக்காக மடானி அரசாங்கம் தெக்குன் வாயிலாக கடன் உதவிகளை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் முறையாக பெற்ற கடனை வெற்றிகரமாக அடைத்தப் பின்னர் இரண்டாவது முறையாக 50,000 ரிங்கிட்டை தெக்குனில் ஒரு பிரிவாக இருக்கும் SPUMI GOES BIG மூலமாக பெற்றேன். இதன் மூலம் என்னுடைய விவசாயத்துறையை சிறப்பான முறையில் விரிவாக்கம் செய்ய முடிந்தது.
அரசாங்கம் வழங்கிவரும் வியாபாரத்திற்கான இதுபோன்ற கடன் உதவிகளை இந்திய வியாபாரிகள் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும். தொழிலை திட்டமிட்டு அபிவிருத்தி செய்யும் அதேவேளையில் பெற்றக் கடனை முறையாக செலுத்தினால் இத்திட்டத்தின் வாயிலாக மேலும் பெரிய கடன் தொகையை பெற்று, தொழிலை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது” என்று மணி வண்ணன் கூறுகிறார்.
சாந்தா பாலனுக்கு கைகொடுத்தது
ஒரு 1 லட்சம் ரிங்கிட்டை SPUMI GOES BIG மூலம் பெற்று இப்பொழுது சிறப்பாக கால்நடை வியாபாரத்தை நடத்தி வருகிறேன் என்கிறார் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 45 வயது சாந்தா பாலன். இதற்கு முன்னதாக தெக்குனில் கடன் கேட்டு முதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். அதில் 20,000 ரிங்கிட்டைப் பெற்றேன். ஆடுகள் ,மாடுகள் மற்றும் கோழிகள் வளர்ப்பை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு முழுமையாக பயன்படுத்தினேன்.
முதல் கடனை முழுமையாக செலுத்தி முடித்தேன். பின்னர் “ SPUMI GOES BIG ” மூலமாக கடன் கேட்டு மீண்டும் விண்ணப்பம் செய்தேன். எனக்கு 60,000 ரிங்கிட் கடன் கிடைத்தது. அந்தக்காலக்கட்டத்தில் கோவிட்- 19 நோய்த் தொற்றுக் காலமாக இருந்தது. அந்த சமயத்தில் அத்தொகை பெரிதும் உதவியது. அந்தக் கடன் தொகை வசதியை கால்நடை வளர்ப்புத் தொழிலை மேலும் அபிவிருத்தி செய்து, அதன் பலாபலனை பெற முடிந்தது.
அந்த கடனை முழுமையாக திருப்பி செலுத்தியப் பின்னர் தொழிலை மேலும் அபிவிருத்தி செய்து கொள்வதற்கு கூடுதலாக ஒரு லட்சம் வெள்ளி தேவைப்பட்டது. அந்தக் கடன் தொகையை கேட்டு “ SPUMI GOES BIG ” திட்டத்திற்கு விண்ணப்பித்தேன். என்ன ஆச்சரியம், விண்ணப்பம் சமர்ப்பித்த ஒரே வாரத்தில் நான் கேட்ட ஒரு லட்சம் வெள்ளி கடன் அங்கீகரிக்கப்பட்டது.
அந்த தொகையைப் பயன்படுத்தி ஆடுகள், மாடுகளை மேலும் அதிகமாக இனவிருத்திச் செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டேன். என் தொழில் வளர்ச்சிக்கு SPUMI கடன் திட்டம் பெரியளவில் கைக்கொடுத்துள்ளது என்பது மட்டும் திண்ணம் என்று சாந்தா பாலன் பெருமிதம் தெரிவித்தது.
சாந்தி சுப்பிரமணியம் பெருமிதம்
இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தெக்குனிலுள்ள SPUMI GOES BIG பிரிவில் நான்காவது முறையாக ஒரு லட்சம் ரிங்கிட்டை பெற்றுள்ளதாக கூறுகிறார் நெகிரி செம்பிலானைச் சேரந்த சாந்தி சுப்பிரமணியம்.
ஆடைகள் வடிவமைப்பு மற்றும் விற்பனைச் வணிகத்தில் ஈடுப்பட்டு வரும் சாந்தி சுப்பிரமணியம் கூறுகையில் “அரசாங்கம் தெக்குன் கடன் உதவி மூலம் சிறு வணிகர்களுக்கு அவர்களின் வியாபாரங்களுக்கு ஏற்றவாறு கடனுதவி வழங்கி வருகின்றனர். இக்கடன் உதவியைப் பெறுவதற்கு முறையான ஆவணங்கள் அனைத்தும் வைத்திருக்க வேண்டும்.
அதே சமயத்தில் கடனுதவி கிடைத்தப்பின்னர் மாதந்தோறும் தவணைப் பணத்தை முறையாக திருப்பி செலுத்த வேண்டும். இந்தியர்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு மற்றவர்களிடம் பணத்திற்காக கை ஏந்தும் காலம் போய், அரசாங்கம் நம் வியாபாரத்திற்காக பணம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது.
எனவே சிறு வியாபாரிகளுக்கும், வியாபாரத்தில் ஈடுபடுவத்தற்கு ஆர்வம் கொண்டுள்ள இளைஞர்களுக்கும் மடானி அரசாங்கம், தெக்குன் கீழ் உள்ள SPUMI GOES BIG திட்டத்தின் மூலம் பணம் உதவி செய்வதற்கு தயாராக உள்ளது.அதனை இந்திய சமுதாயம் முறையாக பயன்படுத்திக் கொள்வது நம் கையில் உள்ளது” என்றார் சாந்தி சுப்பிரமணியம்.
மாடானி அரசாங்கத்தில் வணிகர்களுக்கான கடனுதவித் திட்டங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, நம்பகத்தன்மையுடன் வர்த்தகத்தையும், தொழில்துறையையும் அபிவிருத்திக்கொண்டால் ஒவ்வொருவரும் முன்னேறலாம், வளப்பத்தைக் காணலாம் என்று பலர், SPUMI GOES BIG திட்டம் தங்களுக்கு உதவிய முறை குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.