பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 15-
கோலாலம்பூர் மாநகரில் இன்று காலை 9 மணியளவில் பெய்யத்தொடங்கிய கனத்த மழையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகி, மக்களை பெரும் சிரமத்தில் ஆழ்த்தியது.
இந்த திடீர் வெள்ளம், பிரதான சாலைகளில் கரைப்புரண்டோடியதால் பல வாகனங்கள் நீரில் சிக்கி, இயந்திரங்கள் செயலிழந்தன. முதன்மை சாலைகளில் நீரின் மட்டம் முழங்கால் வரை உயர்ந்ததால் பால சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இன்னும் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோலாலம்பூரில் புக்கிட் அமானை நோக்கி செல்லும் ஜாலான் பார்லிமென், ஜாலான் பேராக் மற்றும் லெபுராயா சுல்தான் இஸ்கந்தர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய வங்கியான பேங்க் நெகாரா சாலைவட்டத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நீரின் மத்தியில் சிக்கிய வாகனங்களை நகர்த்தும் பணியிலும், இழுவை லோரிகளின் மூலம் அவற்றை இழுத்து செல்லவும் வாகனமோட்டிகள் பலர் முனைப்பு காட்டினர். எல்.ஆர்.டி. சேவையில் வங்சா மஜு -வை நோக்கி செல்லும் ஸ்ரீ ராம்பாய் நிலையத்தில் ரயில் இருப்புப்பாதையில் நீர் உயர்ந்துள்ளது. மாநகரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இன்று காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நாடாளுமன்ற மக்களைவைக்கூட்டத் தொடர் காலதாமதமாக தொடங்குவதற்கு ஏதுவாக ஒத்திவைப்பதாக சபா நாயகர் ஜோஹாரி அப்துல் அறிவித்துள்ளார்.
இந்த அடை மழை இன்று பிற்பகல் வரை பெய்யும் என்று வானிலை ஆய்வுத்துறையான Met Malaysia ஆருடம் கூறியுள்ளது..