கோலாலம்பூர், அக்டோபர் 15-
நாட்டில் லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் முழு வீச்சில் பங்காற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மிற்கு பொதுவான ஓர் உத்தரவை தாம் பிறப்பித்ததாகவும், குறிப்பிட்ட நபர்கள் அல்லது வழக்குகளில் முனைப்புக்காட்டும்படி எந்தவொரு உத்தரவையும் SPRM மிற்கு தாம் பிறப்பிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார்.
Bloomberg அனைத்துலக ஊடகத்திற்கு தாம் அளித்த பேட்டியின் போது இதனைதான் தாம் வலியுறுத்தியதாகவும், குறிப்பிட்ட வழக்குகளில் முனைப்பும்காட்டும்படி தாம் கூறியது இல்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் பாசிர் மாஸ் எம்.பி. அஹ்மத் ஃபதில் ஷாரி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து SPRM தன்னிலை விளக்கம் அளித்து இருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட வழக்குகளை கையாளும்படி எந்த சமயத்திலும் பிரதமரிடமிருந்து தாங்கள் உத்தரவு பெறவில்லை என்று அந்த ஆணையம் தெளிவுப்படுத்தியிருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
SPRM- மிற்கு அப்பாற்பட்டு, வருமான வரி வாரியம், போலீஸ் துறை மற்றும் அமலாக்க ஏஜென்சிகளிடம் தாம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பித்தது கிடையாது ன்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.