சென்னையில் மின்தடை இல்லை, 300 நிவாரண மையம், படகுகள் தயார்: உதயநிதி

சென்னையில் நேற்று அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.

அக்டோபர் 15-

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டார். 

அவர் பேசுகையில், “சென்னையில் சராசரியாக 4.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழை விட்ட ஒரு மணி நேரத்தில் தேங்கிய நீர் அகற்றப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.

பலத்த காற்று வீசியதால் சென்னையில் 8 மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது வரை ஒரு மரம் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து மரங்களும் அகற்றப்படும். 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இங்கு தண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளன. 

கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் தவிர சென்னையில் உள்ள 20 சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. மழை நின்றவுடன் இவ்விரு சுரங்கப்பாதைகளும் சரிசெய்யப்படும். 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை. கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.சென்னையில் 89 படகுகளும் மற்ற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்களும் தயாராக உள்ளனர்  என்று கூறினார். 

மேலும், சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மழை வெள்ளத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவத்துறையும், மாநகராட்சியும் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை துணை மேயர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

WATCH OUR LATEST NEWS