திரெங்கானு, அக்டோபர் 16-
KOPI என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த தெரு நாய் ஒன்றை திரெங்கானு, Besut மாவட்ட மன்றம், அண்மையில் ஈவுயிரக்கமின்றி சுட்டுக்கொன்ற நடவடிக்கைக்கு DSK எனப்படும் Dinamik Sinar Kasih சமூக நல இயக்கத்தின் தலைவரும், புரவலருமான டத்தோ என். சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெசுட் மாவட்ட மன்றத்தின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயலாகும். காரணம், பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத, உருவத்தில் சிறிய தோற்றத்தைக்கொண்ட அந்த நாயை பலவந்தமாக சுட்டுக் கொன்று இருக்கக்கூடாது என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்திளார்.
அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறப்படும் அந்த நாய்க்குதான், உள்ளூர் மக்கள் மிகச்செல்லமாக KOPI என்ற பெயரை வைத்து, அழைத்து வருகிறார்களா? என்று டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

யாருக்கும் தீங்கு இழைக்காத நன்றியுடைய அந்த நாய், சம்பந்தப்பட்ட பகுதியில் பூனைகளுடன் விளையாடும் காட்சியைக்கொண்ட காணொலி, பலரை பரவசத்தில் ஆழ்த்தியிருப்பதையும் டத்தோ சிவகுமார் சுட்டிக்காட்டினார்.

யாருக்கும் தொல்லைக்கொடுக்காத KOPI போன்ற வாயில்லாத ஜீவன்களை ஈவுயிரக்கமின்றி சுட்டுக்கொல்வதற்கு பயன்படுத்தப்படும் நேரத்தையும், சக்தியையும், ஆள்பலத்தையும், Besut மாவட்ட மன்ற அமலாக்கத் தரப்பினர், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வேறு சில உருப்படியாக காரியங்களில் செலவிட வேண்டும் என்று டத்தோ சிவகுமார் கேட்டுககொண்டார்.
குறிப்பாக பெசுட் மாவட்டத்தில் நடமாடுகின்ற போதைப்பித்தர்களை பிடித்து மறுவாழ்வு நிலையங்களில் ஒப்படைப்பதிலும், மாவட்டத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வழிப்பறிக் கொள்ளையர்களையும், மேட் ரெம்பிட் போன்றவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பதிலும் அந்த மாவட்ட அமலாக்கத் தரப்பினர் கவனம் செலுத்தலாம் என்று டத்தோ சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.