காவல்துறையினர் தனது வீட்டின் கதவை உடைத்து ஏன் உள்நுழைந்தார்கள் என விர்ஜினியா மெக்கல்லாவிற்கு (Virginia McCullough) தெரியும். ஆனால், அதற்குக் காவல்துறை இவ்வளவு நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் ஆச்சர்யப்பட்டார்.
“உற்சாகமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் குற்றவாளியைப் பிடித்துவிட்டீர்கள்,” என தனக்குக் கைவிலங்கு மாட்டிய அதிகாரிகளிடம் அவர் அமைதியாகக் கூறினார்.
ஜான் (John) மற்றும் லூயிஸ் மெக்கல்லா (Lois McCullough) இருவரும் கடலோரத்தில் வசித்து வருவதாக அவர்களின் அண்டை வீட்டார் நினைத்திருந்தனர். ஆனால், உண்மையில் இருவரும் தன் மகளால் இரக்கமற்ற வகையில் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.

பிரிட்டனில் இருக்கும் செல்ம்ஸ்ஃபோர்ட், எசக்ஸ் (Chelmsford, Essex) அருகில் உள்ள கிரேட் பேடோ (Great Baddow) என்ற பகுதிக்கு அருகில் உள்ள மெக்கல்லாவின் குடும்ப வீடு பெரும் ரகசியமானதாகவே இருந்து வந்தது.
மெக்கல்லா தம்பதி அவர்களது உறவினர்களிடம் தங்களிடமிருந்து விலகி இருக்குமாறு கூறியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் கிளாக்டன் பகுதியில் உள்ள எசக்ஸ் சன்ஷைன் கடற்கரை பகுதியில் வசிப்பதாக நண்பர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பயங்கரமான உண்மைச் சம்பவம் மிகவும் வித்தியாசமானது. பம்ப் ஹில் (Pump Hill) குடியிருப்புப் பகுதியின் மூடிய கதவுகளுக்கு உள்ளே நடந்த இந்தச் சம்பவத்தை கண்டுபிடிக்க 4 வருடங்கள் ஆகியிருக்கிறது.