கோலாலம்பூர், அக்டோபர் 18-
தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்து வரும் ஸ்டீவன் சிம் தலைமையிலான மனித வள அமைச்சு, தொழிலியல் நீதிமன்றத்தின் செயல்திறன் மற்றும் வசதிகளை மேம்படுத்துதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, நிலுவையில் இருந்து வரும் தொழிலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளித்து வரும் மனித வள அமைச்சு, தொழில் நீதிமன்றத்தில் தலைவராக பணியாற்றி, தங்கள் செயல்திறனையும், சிறப்பான அடைவு நிலையையும் தொடர்ந்து நிரூபித்து வரும் இரண்டு இந்தியர்களை மீண்டும் அப்பதவிக்கு நியமித்துள்ளது.

53 வயது ஜெயசீலன் தி அந்தோணிமற்றும் 51 வயது திருமதி வனிதாமணி சிவலிங்கம் ஆகியோர் தங்களின் சிறப்பான பங்ளிப்பிற்காக தொழிலியல் நீதிமன்றத்தின் தலைவர்களாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரை தவிர இளம் வயதுடைய மேலும் ஓர் இந்தியரை, தொழிலியல் நீதிமன்றத் தலைவராக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் புதியதாக நியமித்துள்ளார்..
45 வயது அருண் குமார் கணேசன், தொழிலியல் நீதிமன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றவரான அருண்குமார், கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சட்டத்துறையில் பணியாற்றி வருகிறார். தவிர, தொழிலியல் நீதிமன்ற வழக்குகளில் பரந்த அனுபவத்தை அருண்குமார் கொண்டுள்ளார் என்று மனித வள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மூவரின் நியமனங்களுக்கான கடிதங்களை அவர்களிடம் மனித வள அமைச்சு ஸ்டீவன் சிம்நேரடியாக வழங்கி, தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.