கோலாலம்பூர், அக்டோபர் 18-
தமிழ் நேசன் நாளிதழின் முன்னாள் பிரதம ஆசிரியரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தோற்றுநருமான முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழா, வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள தண்டாயுதபாணி ஆலயத்தின் நகரத்தார் மண்டபத்தில் மாலை 4.00 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், முருகு சுப்பிரமணியத்தின் குடும்பத்தாரும் இணைந்து முன்னெடுக்கவிருக்கும் இந்த நூற்றாண்டு விழாவில் முருகுவின் சேவைகளைப் போற்றும் அதேவேளையில் தமிழ்மொழிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நேசனின் கே.சி. அருணுக்கு பிறகு ஏழாவது பிரதம ஆசிரியராக பொறுப்பேற்றவரான சிறந்த தமிழ் அறிஞரும், எழுத்தாளருமான முருகு.சுப்பிரமணியம், தமிழ் ஏடுகளின் வரலாற்றில் முத்திரைப் பதித்தவர்.
இந்திய சமுதாய மேம்பாடு குறித்து அதிகமாக சிந்தித்தவர். அவரின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் இந்நிகழ்விற்கு எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.