சரவா, அக்டோபர் 23-
அரசாங்கம் அறிவித்துள்ள குறைந்த பட்ச சம்பள விகிதமான 1,700 வெள்ளியை தொழிலாளர்களுக்கு கொடுக்க இயலாத முதலாளிமார்கள், தங்கள் வர்த்தகத்தை இழுத்து மூடுமாறு சரவா மாநில தொழிற்சங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிலாளர்களுக்கு 1,700 வெள்ளி சம்பளம் கொடுத்தால் தாங்கள் நஷ்டப்படக்கூடும் என்று நினைக்கின்ற முதலாளிமார்களும், வர்த்தர்களும், நஷ்ட அடையக்கூடிய வியாபாரத்தை வலிந்து நடத்த வேண்டியதில்லை. வியாபாரத்தை இழுத்து மூடுவதே மேல் என்று சரவா மாநில வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாழ்க்கைச்செலவினம் உயர்ந்த விட்ட நிலையில் 1,500 வெள்ளி குறைந்த சம்பளப்பட்ச விகிதம், இனியும் ஏற்புடையது அல்ல என்பதை கருத்தில் கொண்டே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1,700 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்களின் தொழில் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகின்ற தொழிலாளர்களுக்கு அந்த சம்பளத்தைக்கூட தங்களால் கொடுக்க இயலாது என்று லாபத்தையே குறிக்கோளாக கொண்டு இருக்கும் சில முதலாளிமார்கள் நீலிக்கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர்.
முதலாளிமார்களின் இத்தகைய சாக்குப்போக்குகளை தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை என்று அந்த தொழிற்சஙகம் வலியுறுத்தியுள்ளது.