மலாக்கா,அக்டோபர் 23-
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் துணை விமான நிறுவனமான Scoot விமான நிறுவனம், இன்று முதல் சிங்கப்பூருக்கும், மலாக்காவிற்கும் இடையில் நேரடி விமானச் சேவையை தொடங்கியுள்ளது.
திங்கள், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என வாரத்திற்கு ஐந்து விமானச் சேவைகளை Scoot மேற்கொள்கிறது.
மலாக்காவை அனைத்துலக சுற்றுலாத் தளமாக உருவாக்குவதில் சிங்கப்பூரின் ஸ்கூட் நிறுவனத்தின் விமானச் சேவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது என்று மலாக்கா மாநில சுற்றுலா, கலை, பண்பாட்டு மற்றும் பாரம்பரியத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு உலக சுற்றுலாத் தினம் மற்றும் உலக சுற்றுலா மாநாடு ஆகியவற்றுக்கு மலாக்கா தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில் ஸ்கூட் விமானச் சேவை, சுற்றலாத்துறைக்கு மிகப்பெரிய உந்தும் சக்தியாக அமையும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.