நெகிரி செம்பிலான், அக்டோபர் 25-
நெகிரி செம்பிலான், தம்பின், ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தின் நிலப்பிரச்னைக்கு சமூகமான முறையில் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் ரெபா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

கடந்த 1993 ஆம் ஆண்டிலிருந்து நிலவி வந்த தம்பின், ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தின் யாகசாலை மற்றும் நவகிரகம் வீற்றிருக்கும் பகுதியை இட மாற்ற செய்யும் விவகாரத்தில் எந்தவொரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்படாமல் இவ்விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் இதில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பை நல்கியிருப்பது, அவர்களின் விவேக மற்றும் முதிர்ச்சித் தன்மையை காட்டுகிறது என்று என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் குறிப்பிட்டார்.

அதேவேளையில் ஆலயம் வீற்றிருக்கும் தற்போதைய இடத்தில் இவ்வளவு காலமாக ஒரு நிலப்பகுதியை வழங்கிய நிலையில், அந்த நிலத்தை திரும்பக்கோரும் மஸ்ஜித் ஜமேக் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, மற்றொரு பகுதியில் ஆலயத்தின் யாகசாலை மற்றும் நவகிரகத்தை நிர்மாணிக்க மொத்த 3 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. .

ஏற்னவே ஒரு லட்சம் வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2 லட்சம் வெள்ளி வழஙகப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்திற்கு மொத்தம் 3 லட்சம் வெள்ளி மானியத்தை வழங்குவதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவு நல்கியுள்ள மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி அமினுடின் ஹாருன்க்கும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தியோ கோக் சியோங்- கிற்கும் இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வீரப்பன் தெரிவித்தார்.