கோலாலம்பூர், நவ.6-
மலேசியாவில் ஆயிரக்கணக்கான வங்காளதேசிகள் நுழைவதற்கு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும், தற்போது மலேசியப்பிரஜையாக மாறியுள்ள ஒரு வங்காளதேசியான அமினுல் இஸ்லாம் அப்துல் நோர் மற்றும் அவரின் வர்த்தக சகாவான ருஹூல் அமின் ஆகியோரை கைது செய்து, தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பும்படி வங்காளதேச போலீசார், மலேசியாவை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த இருவர் மீதும் பணமோசடி, மற்றவர்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வர்ததக நோக்கத்திற்கு ஏமாற்றி, கடத்தி வந்தது முதலிய குற்றச்சாட்டுகள் இருப்பதாக வங்காளதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத்தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு மலேசிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை நிறுவனத்தை இயக்கிய பெஸ்தினெட் நிறுவனத்தை தோற்றுவித்தவரும், அதனை இயக்கியவரும் ஒரு வங்காளதேசியான அமினுல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த அவர், தற்போது மலேசிய குடியுரிமையைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிற்து. அவர் தற்போது பெஸ்தினெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கவில்லை என்ற போதிலும் அந்த நிறுவனத்தில் இன்னமும் ஒரு பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது.
ருஹுல் அமின், ஒரு வங்காளதேசி ஆவார். இவர் கெதர்சிஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை வழிநடத்தியவர் என்று கூறப்படுகிறது.
இருவரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் மிகப்பெரிய மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக வங்களாதேச போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.